Published : 09 Aug 2021 06:54 PM
Last Updated : 09 Aug 2021 06:54 PM

கடல் வழி வர்த்தகம் - 5 முக்கிய திட்டம்; ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக உரை

புதுடெல்லி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டத்துக்கு இந்தியா சார்பில் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர் கடல் வழி பாதுகாப்பு, கடல் வழி வர்த்தகம் தொடர்பான 5 முக்கிய அம்சங்களை அவர் முன் வைத்துள்ளார்.

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.

ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது.

அதன்படி இன்று நடைபெறும் கூட்டத்தக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார்.

கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:

நமது கடல் பகுதி தொடர்ந்து பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகின்றது. நமது கடல் பகுதி தனிப்பட்ட தேவை மற்றும் தீவிரவாத்திற்கு தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

நமது பாரம்பரியமான கடல் வழித்தடம் என்பது சர்வதேச வணிகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பூமியில் இந்த அம்சம் மிக முக்கியமானது. எதிர்காலத்திலும் இந்த தேவை உள்ளது. கடல் வழி பாதுகாப்பை பொறுத்தவரையில் 5 முக்கிய திட்டத்தை முன் வைக்கிறேன்.

1) முறையான வர்த்தகத்தை நிறுவுவதற்கு சுதந்திரமான கடல் வாணிபம் தடைகள் இல்லாமல் நடைபெற வேண்டும்.

2) சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் கடல்வழி வணிகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அமைதியாக தீர்க்க வேண்டும்.

3) பொறுப்புள்ள கடல் இணைப்பை ஊக்குவிக்க வேண்டும்.

4) இயற்கை பேரிடர்களால் ஏற்படும் கடல் அச்சுறுத்தல்களை அரசுகள் பங்கேற்காமல் கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்கான தேவை உள்ளது.

5) குறைந்தபட்சம் கடல்சார் சூழல் மற்றும் கடல் வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பல்வேறு உயர்நிலைக் கூட்டங்களில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் ஷிருங்லா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x