Published : 09 Aug 2021 06:06 PM
Last Updated : 09 Aug 2021 06:06 PM
முதல் முறையாக வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது விவசாய பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் இடையே பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பயனுள்ளதாக இருக்கும். ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம் இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது.
75வது சுதந்திர தினம் பெருமிதமான தருணம் மட்டும் அல்ல, புதிய தீர்மானங்களுக்கான வாய்ப்பு. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை நாம் எங்கே பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போது இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில், நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. புதிய சவால்களை சந்திக்கவும், புதிய சந்தர்ப்பங்களின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும் இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம்.
இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நாளில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாடு நினைவுக் கூறுகிறோம். இந்த தீர்மானம் நமக்கு புதிய சக்தியை அளிக்கிறது.
மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் தேவை. பெருந்தொற்று காலத்தில் விவசாயிகள் உற்பத்தியில் வரலாறு படைத்துள்ளனர். இந்த சிக்கலான நேரத்தில், விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும் அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை ஏற்பாடு செய்தது. இதனால் இந்த சுமை விவசாயிகளால் உணரப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதலை அரசு செய்துள்ளது. இதன் காரணமாக, சுமார் ரூ.1,70,000 கோடி நெல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சென்றுள்ளது. சுமார் ரூ.85,000 கோடி கோதுமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளிடம் நான் வலியுறுத்தினேன். இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் பருப்பு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய எடுத்த உறுதிமொழிதான் தேசிய சமையல் எண்ணெய் திட்டம். தேசிய சமையல் எண்ணெய் -பாமாயில் திட்டம் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும்.
தரமான விதைகள் முதல் தொழில்நுட்பம் வரை விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும். முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில், இந்தியா இடம்பிடித்துள்ளது.
கரோனா காலத்தில் வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று, இந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போது சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.
நாட்டின் வேளாண் கொள்கைளில் சிறு விவசாயிகளுக்கு, தற்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த உணர்வுடன் கடந்த சில ஆண்டுகளில் சிறு விவசாயிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1 லட்சம் மோடி கரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.
இதுபோன்று வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் விவசாயிகள் பயனடைவர். உணவு பூங்காக்கள், கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்தாண்டில், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT