Last Updated : 08 Aug, 2021 05:26 PM

3  

Published : 08 Aug 2021 05:26 PM
Last Updated : 08 Aug 2021 05:26 PM

பெகாசஸ் விவகாரம்; நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கும்: சசி தரூர் நம்பிக்கை

புதுடெல்லி

தேசிய அரசியலை உலுக்கி எடுத்துவரும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தும் என நம்புகிறேன் என்று அந்தக் குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச நாளேடுகள் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகியவை தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி கடந்த 3 வாரங்களாக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஒட்டுக் கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

பெகாசஸ் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெகாசஸ் விவாகரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 28-ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த நிலைக்குழுவின் தலைவர் சசி தரூர் எம்.பி. தலைமையில் கூட்டம் நடக்க இருந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை .

அதுமட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், மின்னணுத் துறை, உள்துறை அமைசச்கத்தின் சார்பில் அழைக்கப்பட்டிருந்த அதிகாரிகளும் கடைசி நேரத்தில் முக்கியமான பணி இருப்பதாகக் கூறி கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். தேசிய அளவில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பெகாசஸ் விவகாரத்தில் பதில் அளிக்க எந்த விதத்திலும், வடிவத்திலும் மறுப்பதும் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதுதான், சராசரி மக்களின் பிரதிநிதியாகவும் இந்த அரசு இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க நாடாளுமன்றத்தில் மறுப்பதும், நம்பிக்கையற்று இருப்பதுமே நாடாளுமன்றத்தை அவமதிப்பதுதான்.

கடந்த 2 ஆண்டுகளாகத் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மக்களின் டேட்டா உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்தும் சைபர் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்பு இருந்த நிலைக்குழுத் தலைவர் பாஜகவின் அனுராக் தாக்கூருக்கும் தெரியும்.


ஆதலால், பெகாசஸ் விவகாரம் தகவல்தொழில்நுட்ப நாடாளுமன்றக் குழுவின் வரம்புக்குள்தான். இந்த விவகாரம் குறித்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

நிலைக்குழுக் கூட்டத்தில் எந்த ரகசியமும் இல்லை. கமிட்டியின் கூட்டத்தில் என்ன பேசப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பெகாசஸ் விவகாரம் விவாதிக்கப்படுவதை பாஜக எம்.பி.க்கள் விரும்பாததால், கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் வரை பங்கேற்றுவிட்டு கடைசியில் கையொப்பமிடாதது இதுவரை நடந்திராதது.

இதில் 3 அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்துவிட்டு கடைசி நேரத்தில் தங்களுக்கு முக்கியப் பணி இருப்பதாகக்கூறி நழுவிவிட்டனர். இது நாடாளுமன்ற நிலைக்குழு முன்கூட்டியே திட்டமிட்டு அறிவித்தும் அதில் பங்கேற்காமல் சென்றது மிகப்பெரிய அவமதிப்பாகும். அதுகுறித்து அந்தந்தத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும்

நாடாளுமன்றக் கூட்டுக்குழு பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்குமா என எனக்குத் தெரியாது. நான் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தியது, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அணைக்க வேண்டும், பாரபட்சமற்ற, நியாயமான, விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் தொடர்பான விசாரணையில் அதிபர் நிக்ஸன் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இங்கு நாடாளுமன்றம் விவாதிக்கவே மறுக்கிறது. பெகாசஸ் விவகாரம் என்பது உள்நாட்டுப் பாதுகாப்பு, தனிமனித சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்துள்ளது. இதை உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்''.

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x