Published : 08 Aug 2021 08:25 AM
Last Updated : 08 Aug 2021 08:25 AM

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்: விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது, சில மறுசீரமைப்புப் பணிகளுக்கு பின் மீண்டும் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளத்தின் மற்ற பிரிவுகள் மூலம் ராகுல் காந்தி தொண்டர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பார் என்றும் காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் 9வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, நீதி கிடைக்க துணை இருப்போம் என உறுதியளித்தார். அப்போது அந்தச் சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

போக்ஸோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதி்க்கப்பட்டச் சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும், அது போக்ஸோ சட்டத்தின் விதிமுறை மீறலாகும்.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, ராகுல் காந்தி,போக்ஸோ விதிமுறைகளை மீறிவிட்டதால், ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியும், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் பேசியத் தொடர்பான புகைப்படத்தையும் நீக்கியுள்ளார். ஆனாலும், புகைப்படம் நீக்கப்பட்டு 24 மணிநேரம் வரை ட்விட்டர் கணக்கு முடக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படவில்லை தொடர்ந்து செயல்பாட்டில்தான் இருக்கிறது. ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டால் உலகளவில் அந்த கணக்கின் செயல்பாடு முடக்கப்படும்” எனத் தெரிவித்தார்

ட்விட்டர் நிறுவனத்தின்படி ஒருவர் விதிமுறைகளை மீறி செயல்பட்டு சர்ச்சைக்குரிய பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டால் அவரின் கணக்கு 24 மணிநேரத்துக்கு முடக்கப்படும். அந்த வகையில் ராகுல் காந்தி சிறுமியின் தாயின் புகைப்படத்தை பதிவிட்டதால் 24 மணிநேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்புக்குப்பின் மீண்டும் செயல்படும். அதுவரை ராகுல் காந்தி பிறசமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருப்பார். மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார்.ஜெய் ஹிந்த் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x