Published : 07 Aug 2021 04:51 PM
Last Updated : 07 Aug 2021 04:51 PM
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 3-வது வாரத்தில் மாநிலங்களவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அவையின் செயல்பாடு 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றம் ஜூலை 19-ம் தேதி தொடங்கியதிலிருந்து பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்ததால் அவை சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரத்தில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.
ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே அவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது. 3 மணி நேரம் 19 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கும், கரோனா சூழல் குறித்து குறுகிய நேரம் மட்டுமே விவாதிக்கப்பட்டது.
இதுவரை மாநிலங்களவையில் 12 மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. 80க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேத்தில் 197 மணி நேரம், 153 சிறப்பு கவன ஈர்ப்பு ஆகியவை அமளியால் வீணாகின.
ஆனால், கடந்த வாரத்தில் மாநிலங்களவையின் செயல்பாடு 13.70 சதவீதத்திலிருந்து 24.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் வாரத்தில் 32.20 சதவீதம் செயல்பாடு இருந்தது. ஒட்டுமொத்தமாகக் கடந்த 3 வாரங்களில் மாநிலங்களவையின் செயல்பாடு சராசரியாக 22.60 சதவீதமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 வாரத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த 68 எம்.பி.க்கள் அவையில் விவாதங்களில் பங்கேற்றனர். மசோதாக்களை நிறைவேற்ற அவையில் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் செலவிடப்பட்டது. 28 மணி நேரம் 30 நிமிடங்கள் கடந்த வாரம் இருந்த நிலையில் அதில் கேள்வி நேரத்தில் ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் 17 நட்சத்திரக் குறியீடு செய்யப்பட்ட கேள்விகளுக்கு வாய்மொழியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். 17 மணி நேரம் 36 நிமிடங்கள் அமளி காரணமாக அவை வீணடிக்கப்பட்டது.
அவையில் அதிமுக, ஆம் ஆத்மி கட்சி, பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, ஐக்கிய ஜனதா தளம், என்சிபி, ஆர்ஜேடி, புரட்சிகர சோசலிஸ்ட் , சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT