Published : 07 Aug 2021 08:49 AM
Last Updated : 07 Aug 2021 08:49 AM
சர்வதேச மருந்து நிறுவனமான ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் தனது கரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட பல்வேறு வகை கரோனா வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிஸ் வகை தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் நிலையில் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு(Janssen Ad26.CoV2.S vaccine ) உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதுவரை உலக மக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 2 டோஸ் கொண்டவையாகும், ஆனால், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் மட்டும் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி கரோனா வைரஸின் லேசான மற்றும் மிதமான பாதிப்புக்கு எதிராக 66.3 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது, தீவிரமான நோய் தொற்றுக்கு எதிராக 76.3சதவீதம் சிறப்பாகச் செயலாற்றுகிறது.
இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 28 நாட்களுக்குப்பின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி தீவிரமான தொற்றுக்கு எதிராக 85.4 சதவீதமும், மருத்துவமனைக்கு செல்லவிடாமல் 93 சதவீதமும் தடுக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ இந்தியாவில் அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசிடம் அனுமதி கோரி ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கரோனா தடுப்பூசிகளில் முக்கிய மைல்கல்லாக, இந்திய மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சிங்கிள் டோஸ் கரோனா தடுப்பூசியாகும். உலகில் பல்வேறு நாடுகளில் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து மருந்தை தயாரித்து வருகிறோம்.
உலகளவில் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் கரோனா தடுப்பூசியை தடையின்றி வழங்குவதற்கு பயோலாஜிக்கல்இ நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகதாார அமைப்பின் கோவேக்ஸ் அமைப்புடன் இணைக்கமாகச் செயல்பட்டும், பல்வேறு நாடுகளின் அரசுகளுடனும் கூட்டு வைத்தும் இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.
ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் தடுப்பூசி கரோனா வைரஸின் அனைத்து உருமாற்றத்துக்கு எதிராக 85 சதவீதம்சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப்பின், தடூப்பூசி அளிக்கும் பாதுகாப்பால் கரோனா தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு செல்வதிலிருந்து தடுக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT