Last Updated : 07 Aug, 2021 03:17 AM

 

Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு மாற்றாக ராஜ் தாக்கரேவுடன் நெருக்கம் காட்டும் பாஜக

புதுடெல்லி

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியில் உள்ளது. பாஜக.வில் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த சிவசேனா கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரிந்தது. அது முதல் அந்த இடத்தில் எம்என்எஸ் கட்சியை சேர்த்து வளர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற் காக அக்கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேசி வருகிறார்.

இருவரும் கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நாசிக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தான் வட மாநிலத்தவருக்கு எதிரி அல்ல. அவர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்று ராஜ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். மேலும், மேடை பேச்சுகளின் பதிவுகளையும் சந்திரகாந்திடம் கொடுத்துள்ளார்.

அவற்றை பார்த்த பிறகு வட மாநிலத்தவர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரே தவறாக எதுவும் பேசவில்லை என்பதை சந்திரகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே இந்த சந்திப்பில் கூட்டணிக்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ராஜ் தாக்கரே தனது கட்சிக்கான புதிய கொடியை கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தினார். அப்போது தனது உரையில் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் வகையில் பேசினார். இந்த மாற்றத்தால் அவரை கூட்டணியில் சேர்த்து, சிவசேனாவுக்கு மாற்றாக வளர்க்க முடிவு செய்துள்ளோம். ஏனெனில், ஆட்சிக்காக காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்த சிவசேனா தனது இந்துத்துவா கொள்கையை கைவிட்டு விட்டது’’ என்றனர்.

அரசியல் ஆதாயத்துக்காக தமிழர்களை எதிர்த்து முதன் முறையாக மண்ணின் மைந்தர் பிரச்சினையை தொடங்கியவர் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே. இவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரே சிவசேனாவில் சுமார் 12 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்தார். பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரேவுக்கு முக்கியப் பதவி கொடுத்ததால் அவருடன் ராஜுக்கு மனக் கசப்பு ஏற்பட்டது.

இதனால், சிவசேனாவை விட்டு வெளியேறிய ராஜ், எம்என்எஸ் எனும் பெயரில் கட்சி தொடங்கினார். அப்போது பால் தாக்கரேவை போல் ‘மண்ணின் மைந்தர்’ விவகாரத்தை ராஜ் கையில் எடுத்தார். மகாராஷ்டிராவில் உள்ள உ.பி., பிஹார் உள்ளிட்ட வட மாநிலத்தினர் வெளியேற வேண்டும் என போராட்டம் நடத்தினார்.

கடந்த ஆண்டு கரோனாவைரஸ் பரவலுக்கு பிறகு மகாராஷ்டிரா திரும்பிய வட மாநில தொழிலாளர்களின் எண் ணிக்கையை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் மனு அளித்திருந்தார் ராஜ் தாக்கரே. இந்த நிலைப் பாட்டினால், காங்கிரஸ் அவரைதம்முடன் சேர்க்க மறுத்திருந்தது.

இந்நிலையில் சில விளக்கங்களுக்குப் பிறகு ராஜ் தாக்கரேவை தம் கூட்டணியில் சேர்க்க பாஜக திட்டமிடுவதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x