Published : 06 Aug 2021 05:48 PM
Last Updated : 06 Aug 2021 05:48 PM

தோனி ட்விட்டர் கணக்குக்கு மீண்டும் வழங்கப்பட்ட ப்ளூ டிக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மைக்ரோ ப்ளாக்கிங் நிறுவனமான ட்விட்டர் தனது வாடிக்கையாளரின் ட்விட்டர் பக்கத்தின் உண்மைத்தன்மையை சோதித்து அங்கீகரித்துவிட்டால் அதற்காக 'வெரிஃபைட் டிக்' வழங்குகிறது. இந்த டிக் நீல நிறத்தில் வழங்கப்படுகிறது.

பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், நாட்டின் பிரதமர், அதிபர் போன்றோர், உயரதிகாரிகள், சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் போன்றோர் தங்களின் ட்விட்டர் கணக்கை வெரிஃபைட் செய்து கொள்கின்றனர். பிரபலங்கள் பெயரின் மூலம் போலி கணக்கை உருவாக்கி அதில் சர்சைக்குரிய, அவதூறு கருத்துகளை யாரேனும் வெளியிடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ப்ளூ டிக் உதவுகிறது.

ஆனால், இந்த ப்ளூ டிக் வசதி பெற்றவர்களின் அவர்தம் கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ட்விட்டர் அவர்களது ப்ளூ டிக்கை நீக்கிவிடுகிறது. இது ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையாக உள்ளது.

தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், இது போலவே குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதற்கு பல தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, 6 மாதங்களாக அவரது ட்விட்டர் கணக்கு ஆக்டிவாக இல்லாததால் ப்ளூ டிக்கை நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. பின்னர், மீண்டும் அதனை வழங்கிவிட்டது.

அதுபோலவே, 8.20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தோனி கடைசியாக கடந்த ஜனவரி 8 ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்ட்ராபெர்ரி தோட்ட வீடியோவுக்கான லிங்க்கை கொடுத்திருக்கிறார். நான் அடிக்கடி ஸ்ட்ராபெர்ரி தோட்டத்துக்குச் சென்றால் எதுவும் மிஞ்சாது என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

அதன் பிறகு அவரது ட்விட்டர் கணக்கில் எதுவும் பதிவாகவில்லை. இதன் காரணமாகவே அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ட்விட்டர் நிறுவனம் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கெட் நீக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் ப்ளூ டிக்கை வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x