Published : 06 Aug 2021 02:33 PM
Last Updated : 06 Aug 2021 02:33 PM

சிபிஐ, ஐபி போன்ற உளவு அமைப்புகள் நீதிபதிகளின் புகார்களை பொருட்படுத்துவதே இல்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

சிபிஐ, ஐபி போன்ற உளவு அமைப்புகள், நீதிபதிகள் தங்களுக்கு வரும் மிரட்டல்கள் குறித்து புகார் தெரிவித்தால் அதைப் பொருட்படுத்துவதே இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் (49) வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். காலையில் நடைபயிற்சி சென்ற அவரை ஆட்டோவை மோதி கொலை செய்யும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு நீதிபதிகளுக்கு பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது:

சிபிஐ தனது போக்கில் சிறு மாற்றத்தைக் கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எப்போது நீதிபதிகள் தங்களுக்கு வரும் மிரட்டல் குறித்து புகார் தெரிவித்தாலும் சிபிஐ, ஐபி போன்ற உளவு அமைப்புகள் அதில் சிறிதும் உதவுவது கிடையாது. மிகப்பெரிய வழக்குகளில் தங்களுக்கு ஆதாயமாக தீர்ப்பு வராவிட்டால் நீதித்துறையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நிறைய செயல்கள் செய்யப்படுகின்றன. அதுபோலவே, நீதிபதிகளில் செல்ஃபோன் என்களுக்கு மிரட்டும் தொணியில் குறுந்தகவல்கள் வருகின்றன. வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களிலும் மிரட்டல் விடுக்கப்படுகின்றன. மன ரீதியாக உளைச்சலை ஏற்படுத்துகின்றனர்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் வரும்போது, சிபிஐ, ஐபி போன்ற உளவு அமைப்புகளிடம் நீதிபதிகள் புகார் கூறினால், அவர்களோ அதைக் கண்டுகொள்வதே இல்லை.

உளவு அமைப்புகள் எப்போதுமே நீதிபதிகளுக்கு உதவியது இல்லை. இதனை நான் பொறுப்புணர்வோடு தான் சொல்கிறேன். இதற்கு மேலேயும் இதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதில் ஏதாவது செய்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், நீதிபதிகளுக்கு பாதுகாப்பு கோரும் இந்த மனு மீது மத்திய அரசு இன்னும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x