Published : 15 Feb 2016 04:22 PM
Last Updated : 15 Feb 2016 04:22 PM
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனிடம் வழக்கு விசாரணைகள் எதையும் ஒப்படைக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வரும் சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த பணியிட மாறுதல் உத்தரவை நீதிபதி கர்ணனே தடை செய்து இன்று உத்தரவிட்டார். இதோடு இல்லாமல் பணியிட மாற்றம் ஏன் என்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 29-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
முன்னதாக நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு, நீதிபதி கர்ணன் எந்த வித உத்தரவையும் பிறப்பிக்கலாகாது என்று தடுத்து நிறுத்தி உத்தரவு பிறப்பித்தனர். அவர் அப்படியே பணிமாறுதல் உத்தரவுக்கு தானே தடை விதித்தாலும் அது உச்ச நீதிமன்றத்தை எந்த விதத்திலும் பிணைக்காது என்று கூறியிருந்தனர்.
நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவை மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார்.
இதனையடுத்து நீதிபதி கேஹர் பிறப்பித்த எழுத்துபூர்வ உத்தரவில், “கர்ணன் தனது பணியிட மாற்ற உத்தரவைப் பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அவருக்கு (நீதிபதி கர்ணனுக்கு) எந்த வித வழக்கு விசாரணைகளையும் வழங்க வேண்டாம் என்பது நியாயபூர்வமாகவும், சரியானதாகவும் இருக்கும் என்று நாங்கள் கருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு நீதிபதி கர்ணனுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் வேண்டுமானால் அவர் தனது சொந்த செலவில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என்றும் நீதிபதி கேஹர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி:
பிப்ரவரி 10-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் சாதிரீதியாக பாகுபாடு பாராட்டுகிறார் என்று குற்றஞ்சாட்டி கடிதம் எழுதினார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்கள் இதில் உச்ச நீதிமன்ற தலையீடு கோரி வெள்ளிக்கிழமையன்று அவசர கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அதாவது பிரச்சினை என்னவெனில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் கவர்னர்கள் வாரியத்திலிருந்து நீதிபதி கர்ணன் பெயரை நீக்கினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே கர்ணன், சாதிப்பாகுபாடு புகாரை எழுப்பினார். அதாவது தனக்கு பதிலாக தன்னை விட ஜூனியரான, மேல்சாதி நீதிபதி ஒருவரைச் சேர்த்ததாக நீதிபதி கரணன் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் பட்டியலில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும் கர்ணன் சுட்டிக்காட்டினார். இந்தக் கடிதத்தை ரிட்மனுவாகக் கருத வேண்டும் என்று கர்ணன் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பிப்ரவரி 12-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு கர்ணன் மாற்றப்பட்டதற்கான பணியிட மாற்ற உத்தரவை அவர் பெற்றதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT