Published : 05 Aug 2021 07:13 PM
Last Updated : 05 Aug 2021 07:13 PM
தீபக் புனியா, வெண்கலப் பதக்கத்தைக் குறைந்த வித்தியாசத்தில் இழந்துள்ளார், ஆனால் நமது மனங்களை அவர் வென்றிருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மன உறுதி மற்றும் திறமையில் ஆற்றல்மிக்கவராக அவர் விளங்குவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக் புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா, சான் மரினோவைச் சேர்ந்த நசீம் அமீனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தீபக் புனியா தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
தீபக் புனியா, வெண்கலப் பதக்கத்தைக் குறைந்த வித்தியாசத்தில் இழந்துள்ளார், ஆனால் நமது மனங்களை அவர் வென்றிருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“தீபக் புனியா, வெண்கலப் பதக்கத்தைக் குறைந்த வித்தியாசத்தில் இழந்திருக்கிறார். ஆனால் நமது மனங்களை அவர் வென்றுள்ளார். மன உறுதி மற்றும் திறமையில் ஆற்றல்மிக்கவராக அவர் விளங்குகிறார். தீபக்கின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
அதுபோலவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் “ரவி குமார் தாஹியா, குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர்! அவரது போராடும் ஆற்றலும், விடாமுயற்சியும் மிகச் சிறப்பாக உள்ளது. டோக்கியோ 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா மிகுந்த பெருமை கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT