Published : 05 Aug 2021 06:23 PM
Last Updated : 05 Aug 2021 06:23 PM
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இது, அடுத்த வருடம் அம்மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 இல் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏவுடன் இணைந்து போட்டியிட்டது சுஹல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டி (எஸ்பிஎஸ்பி). இதன் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் உ.பி.யில் 18 சதவிகிதம் உள்ள ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
இதனால், பிற்படுத்தப்பட்ட சமூகக் கட்சியாக எஸ்பிஎஸ்பி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. கிழக்கு உ.பி.யில் செல்வாக்குள்ள இந்த கட்சி அப்பகுதியை பூர்வாஞ்சல் எனும் தனிமாநிலமாகப் பிரிக்க எஸ்பிஎஸ்பி கோரி வருகிறது.
கடந்த 2017-ல் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏவின் கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வென்றது. இதையடுத்து ஓம் பிரகாஷ் உ.பி.யின் கேபினேட் அமைச்சரானார்.
அடுத்து 2019 இல் வந்த மக்களவை தேர்தலில் தான் கேட்ட 4 தொகுதிகளுக்கு பதிலாக ஒன்று மட்டும் அளிக்கப்பட்டது. இதனால், பாஜக தலைமையிலான என்டிஏவை விட்டு ஓம் பிரகாஷ் கட்சி வெளியேறியது.
தொடர்ந்து, உ.பி.யின் 2022 சட்டப்பேரவையில் போட்டியிட சங்கல்ப் மோர்ச்சா எனும் பெயரில் மூன்றாவது அணி அமைக்கத் துவங்கினார். இதன் உறுப்பினர்களாக ஹைதராபாத் எம்.பியான அசாதுத்தீன் உவைஸியின் ஏஐஎம்ஐஎம், கிருஷ்ணா பட்டேல் பிரிவின் அப்னா தளம். ஆம் ஆத்மி, முலாயம்சிங்கின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவ் உள்ளிட்ட சிறிய கட்சிகளை சேர்க்க முயன்றார்.
இதனால், தம் வாக்குவங்கி சேதமடையும் எனக் கருதிய பாஜக, மீண்டும் ஓம் பிரகாஷிடம் பேச்சுவார்த்தை துவக்கி உள்ளது.
இது குறித்து எஸ்பிஎஸ்பியின் ஓம் பிரகாஷ் கூறும்போது, ‘‘உபி மாநில பாஜக தலைவர் சுதந்திரா தேவ்சிங்குடன் பேசியது உண்மையே.
பிற்படுத்தப்பட்டவரை முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் பாஜகவுடன் இணையலாம். இதன்மூலம், முஸ்லிம்களுக்கும் பலன் என்பதால் ஒவைஸி கோபிக்க மாட்டார்’’ எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவர்களுடன் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷின் சந்திப்பை, ஆம் ஆத்மி கட்சி கண்டித்துள்ளது. அதன் உ.பி. தலைவரான சப்ஜித்சிங், ஓபிசி மற்றும் தலித் பிரிவினருக்கு ஓம் பிரகாஷ் துரோகம் இழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியுடன் மூன்றாவது கூட்டணியை இணைக்க ஓம் பிரகாஷ், ரகசியமாக அகிலேஷ்சிங் யாதவுடன் பேச்சுவார்த்தை துவக்கி இருந்தார். இதை கணித்து விட்ட பாஜக முந்திக்கொண்டதாகக் கருதப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷை இழுப்பதன் மூலம், உ.பி.யின் மற்ற சிறியக் கட்சிகளின் ஆதரவையும் பெறலாம் என பாஜக எண்ணுகிறது. இதற்கு முன் அனுப்பிரியா பட்டேல் பிரிவின் அப்னா தளம் கட்சியும் பாஜகவை விட்டு சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைக்க முயன்றது.
அனுப்பிரியாவிற்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடமளித்து பாஜக அம்முயற்சியை தடுத்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT