Published : 05 Aug 2021 05:10 PM
Last Updated : 05 Aug 2021 05:10 PM
ஆகஸ்ட் 5-ம் தேதி வரலாற்றில் நினைவுகூரப்படும் முக்கியமான நாளாகும் என பிரதமர் மோடி கூறினார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
ஆகஸ்ட் 5-ந் தேதியை பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்ட நாளாக, உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டாடுகிறது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறாமல் ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத்தும் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
ஆகஸ்ட் 5-ம் தேதி வரலாற்றில் நினைவுகூரப்படும் முக்கியமான நாளாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு இதேநாளில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான குடும்பங்கள் இலவச ரேஷன் பெறுகின்றனர். நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் அச்சுறுத்தப்பட்டபோதும் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டபோதும், ஒரு குடிமகன் கூட பட்டினி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் உதவியது.
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை உலகம் அங்கீகரித்தது. பெருந்தொற்று நேரத்தில் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு, ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட செலவில் இலவச ரேஷன் கிடைத்தது. ஏழைகளுக்குத் தீபாவளிவரை இலவச ரேஷன் வழங்கப்படும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு செய்யவும், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவும் சிலர் எவ்வளவு முயன்றாலும் சரி, நம் நாடு அத்தகைய சுயநலத்திற்கும் அரசியலுக்கும் பணிந்து விடாது.
புதிய இந்தியா பதக்கங்களை வெல்வதன் மூலமாக உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவருகிறது. ஒருவரின் வளர்ச்சி என்பது அவரின் கடின உழைப்பால் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT