Last Updated : 05 Aug, 2021 04:39 PM

33  

Published : 05 Aug 2021 04:39 PM
Last Updated : 05 Aug 2021 04:39 PM

சிலரின் செல்போன் எண் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை: காங்கிரஸ் மீது ரவிசங்கர் பிரசாத் தாக்கு

பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் | கோப்புப்படம்

புதுடெல்லி

பெகாசஸ் மென்பொருள் மூலம் சிலரின் செல்போன் எண் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லை. எந்தவிதமான அர்த்தமுள்ள விவாதத்துக்கும் மத்திய அரசு தயார் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஒட்டுக் கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரமாக இருக்கட்டும், விவசாயிகள் பிரச்சினையாக இருக்கட்டும் அர்த்தமுள்ள எந்தவிதமான விவாதத்துக்கும் பாஜக தயாராக இருக்கிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம் விளக்கம் கேட்டன. நாடாளுமன்றத்தில் அவர் விளக்கம் அளித்தபோது, அதில் விவாதத்துக்கு வராமல் அவர் கையில் இருந்த காகிதங்களைப் பிடுங்கி எதிர்க்கட்சிகள் கிழித்தன.

நாடாளுமன்றத்துக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் கட்சி நடப்பது மதிப்பான செயல்பாடு அல்ல. அவ்வாறு எதிர்க்கட்சிகள் காங்கிரஸுடன் சேர்ந்து செயல்பட்டால் ஒரு குடும்பத்தைக் காக்கவே பயன்படும்.

பிரதமர் மோடி அரசுக்கு யாரெல்லாம் விரோதமாக இருக்கிறார்களோ, மோடி எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்களோ அவர்கள்தான் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்துக்குப் பின்னாலும் இருக்கிறார்கள். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே இது திட்டமிடப்பட்டது.

எந்த செல்போன் எண்களாவது ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு அடிப்படை ஆதாரங்கள், முகாந்திரம் இருக்கிறதா? உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளார்.

அவரின் செல்போன் எண் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர் கடந்த 2014-ம் ஆண்டே தனது செல்போன் எண்ணை சரண்டர் செய்துவிட்டதாகக் கூறுகிறார்.

பிரதமராக நரேந்திர மோடி இருப்பதால் காங்கிரஸ் கட்சியால் ஒத்துப்போக முடியவில்லை. பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக அடுத்தடுத்து தேர்தலில் வெற்றி பெற்று வரும்போது, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக நாடாளுமன்றத்தை முடக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு எதிலும் ஊழல் நடக்கவில்லை என்று அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரத்து செய்துத. ஆனால், தற்போது எதிர்க்கட்சிகளின் அமளியில் மக்களின் வரிப்பணி ரூ.130 கோடி வீணாகிறது''.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x