Published : 05 Aug 2021 03:00 PM
Last Updated : 05 Aug 2021 03:00 PM
இஸ்ரேலின் மென்பொருள் பெகாசஸ் மூலம் பலரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் உண்மையாக இருந்தால், அது தீவிரமான குற்றச்சாட்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மனுதார்ரகளான மூத்த பத்திரிகையாளர்கள் என் ராம், எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மனுதாரர்கள் தங்களின் மனுக்களின் நகலை மத்திய அரசு சார்பில் வழங்கறிஞருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.
விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்எல் சர்மா, பத்திரிக்கையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எட்டிடர்ஸ் கில்ட் ஆப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், எடிட்டர்ஸ் கில்ஆப் இந்தியா, சசிகுமார் சார்பி்ல் மூத்தவழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார்.
தலைமைநீதிபதி என்.வி.ரமணா கூறுகையில் “ இந்த வழக்கிற்குச் செல்லும் முன், எங்களிடம் சில கேள்விகள் உள்ளன. மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள், அறிக்கைகள் உண்மையாக இருந்தால், குற்றச்சாட்டு உண்மையில் தீவிரமானதுதான்.
செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக கடந்த 2019-ம் ஆண்டே குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டில் ஏதேனும் தகவல் கண்டுபிடிக்கப்பட்டதா அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா. எங்களுக்கு அதுபற்றி தெரியாது.
இது வெறும் இடையூறுதான் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு வழக்கின் உண்மைக்குள்ளும் நான் செல்லவில்லை. சிலர் தங்களின் செல்போன்கள் இடைமறிக்கப்பட்டு கேட்கப்பட்டதாக உணர்ந்தால், தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.
அதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில் “ என்னால் விளக்கமுடியும். பல விஷயங்களை அணுகுவதற்கான கருவிகள் எங்களிடம் இல்லை. ஆனால் மனுதார்களில் கூறுகையில் ஏறக்குறைய செல்போனில் நேரடியாக 10 முறை இடைமறி்க்கப்பட்டதாகக் கூறுகிறார்” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ அப்படியென்றால், மனுதாரர்கள் தங்களின் மனுக்கள் நகலை மத்திய அரசிடம் வழங்குங்கள். மத்திய அரசு சார்பில் யாரேனும் வந்து இந்த நோட்டீஸைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். எந்த விவகாரத்தில் நாங்கள் நோட்டீஸ் வழங்கப்போகிறோம் என எங்களுக்குத் தெரியாது. மத்தியஅரசு சார்பில் முன்வந்து நோட்டீஸ் பெறட்டும் அதன்பின் பார்க்கலாம்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT