Published : 05 Aug 2021 11:56 AM
Last Updated : 05 Aug 2021 11:56 AM
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாட்டில் அடுத்துவரும் பண்டிகைக் காலங்களான முகரம், ஓணம், ஜென்மாஷ்டமி, கணேஷ் சதுர்த்தி, துர்கா பூஜை ஆகிய பண்டிகைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும், மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''ஐசிஎம்ஆர், தேசிய நோய்த் தடுப்பு மையம் ஆகியவை அடுத்து வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவது குறித்தும், கரோனாவைப் பரப்பும் சூப்பர் ஸ்பிரெட்டர் இடங்களாக மாறுவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த மாதத்திலிருந்து நாட்டில் கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. சில மாநிலங்களில் மட்டுமே கரோனா தொற்றும், பாசிட்டிவ் வீதமும் அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் மையங்களை அமைக்க கடந்த மாதம் 29-ம் தேதி உள்துறை அமைச்சகம் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
இதன்படி, வரும் 19-ம் தேதி முகரம் பண்டிகை, 21-ம் தேதி திருவோணம், 30-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 5 முதல் 15 வரை துர்கா பூஜை போன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் அதிக அளவு கூடலாம், அதனால் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.
ஆதலால், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மாநில அளவில் கட்டுப்பாடுகளை விதித்து பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமான அளவில் கூடாமல் தடுக்க வேண்டும்.
பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கரோனா பரவலுக்கு ஏற்ற இடமாக மாறிவிடும், அதன் மூலம் தொற்று அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர், என்சிடிசி தெரிவித்துள்ளன.
ஆதலால், பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, தடுப்பு வழிமுறைகள் இந்த 5 தடுப்பு வழிகளைக் கடைப்பிடிப்பதில் எந்தவிதமான தளர்வுகளையும் மாநில அரசுகள் அளிக்காமல் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு தளர்வுகள் அளித்தால் இதுவரை கட்டுப்படுத்திவந்த கரோனா தொற்று நடவடிக்கை பயனற்றுவிடும்''.
இவ்வாறு அசோக் பூஷன் தெரிவித்துள்ளார்.
இற்கிடையே மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், பல மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவலுக்கான ஆர் மதிப்பு அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, தமிழகம், மிசோரம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆர் மதிப்பெண் அதிகரித்து வருகிறது.
ஆர் மதிப்பெண் என்பது கரோனா பரவலின் வேகத்தை மதிப்பிடும் முறையாகும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் குறைவாக இருந்தால், கரோனா பரவல் வேகம் குறைவாக இருந்து வருகிறது என்றும், ஒன்றுக்கு அதிகமாக இருந்தால், கரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும் அர்த்தம். அந்த வகையில் இந்த 10 மாநிலங்களில் ஆர் மதிப்பெண் ஒன்றுக்கு அதிகமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT