Published : 03 Aug 2021 09:06 PM
Last Updated : 03 Aug 2021 09:06 PM

இந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்காண்டு 5 சதவீதம் அதிகரிக்கும்: அமைச்சர் அஸ்வினி குமார் நம்பிக்கை

புதுடெல்லி

கோவிட் சவால்கள் ஏற்பட்டாலும் இந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்காண்டு 5 சதவீதம் அதிகரிக்கும் எனவும், 2021ம் நிதியாண்டில் இது, 56.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியுள்ளதாவது:

சத்தீஸ்கரில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 2.01 கோடி பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 7.19 லட்சம் பேர் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் உள்ளனர். தற்போது, நாடு முழுவதும், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 79.51 கோடி பேர் உள்ளனர்.

பிரதமரின் கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், தெலங்கானாவுக்கு 2020-ம் ஆண்டில் 7.66 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும், 2021ம் ஆண்டில் 6.71 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உலகளாவிய பட்டினி பட்டியலில் கடந்த 2000ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பீடு 38.9 ஆக இருந்தது. அது 2020ம் ஆண்டில் 27.2 ஆக குறைந்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதை காட்டுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் கரிப் கல்யான் அன்ன யோஜனா மற்றும் இதர நலத்திட்டங்கள் மூலம் 2020-21ம் ஆண்டில் 948.37 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும், 2021-22ம் ஆண்டில் 860.63 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை, அரிசி, நெல் ஆகியவற்றை சேமித்து வைக்க, இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசுத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன், எஃகு மூலம் உணவு தானியக் களஞ்சியங்களை உருவாக்க, மத்திய அரசு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. தற்போது வரை நாட்டின் பல பகுதிகளில் 29.75 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சேமிக்கும் வகையில் எஃகு களஞ்சியங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10.625 லட்சம் மெட்ரிக் கொள்திறனுடனான களஞ்சியங்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டது. மீதப் பணிகள் நடந்து வருகின்றன.

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க ‘ஆப்ரேஷன் கிரீன்’ திட்டம் 208-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மதிப்புச் சங்கிலி உருவாக்கப்பட்டு உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விலை நிலை நிறுத்தப்படுகிறது, அறுவடைக்குப் பிந்தைய இழப்பு குறைக்கப்படுகிறது, உணவுப் பதப்படுத்தும் திறன் அதிகரிக்கப்படுகிறது.

மேலும், குறுகியகால விலை நிர்ணய நடவடிக்கைகள், மேலும் 41 வகை காய்கறி மற்றும் பழங்கங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. ஆப்ரேஷன் கிரீன் திட்டத்தின் கீழ், தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 19ம் தேதி வரை ரூ.47.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் சவால்கள் ஏற்பட்டாலும் இந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்காண்டு 5 சதவீதம் அதிகரிக்கும் எனவும், 2021ம் நிதியாண்டில் இது, 56.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x