Published : 03 Aug 2021 05:54 PM
Last Updated : 03 Aug 2021 05:54 PM
50 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாகச் சென்று கொண்டிருப்பதாகவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கூட்டத்தில் இருப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இத்திட்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த குஜராத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச ரேஷன் பெறுகின்றனர். இந்த இலவச ரேஷன், ஏழைகளின் துயரத்தைக் குறைத்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எந்தவிதப் பேரிடராக இருந்தாலும், நாடு தன்னுடன் உள்ளது என்பதை ஏழைகள் உணர வேண்டும்.
சுதந்திரத்துக்குப் பின், ஏழைகளுக்கு மலிவு விலை உணவு அளிப்பது பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசும் பேசியது. மலிவு ரேஷன் திட்டங்களுக்கான நோக்கம் மற்றும் பட்ஜெட் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஆனால், அதன் தாக்கம் குறைவாக இருந்திருக்க வேண்டும். நாட்டின் உணவு தானிய இருப்பு தொடர்ந்து அதிகரித்தது. ஆனால், அந்த அளவுக்குப் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறையவில்லை. பயனுள்ள விநியோக முறை குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம்.
இந்த நிலையை மாற்ற, 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, பணிகள் தொடங்கப்பட்டன. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டனர். ரேஷன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டன.
இது, நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் அச்சுறுத்தப்பட்டபோதும் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டபோதும், ஒரு குடிமகன் கூட பட்டினி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய உதவியது.
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை உலகம் அங்கீகரித்தது. பெருந்தொற்று நேரத்தில் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு, ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட செலவில் இலவச ரேஷன் கிடைத்தது.
இன்று கோதுமை கிலோ ரூ.2க்கும் அரிசி கிலோ ரூ.3க்கும் வழங்கப்படுவதோடு, 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி ஒவ்வொரு பயனாளிக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, சுமார் இரு மடங்கு ரேஷன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தீபாவளி வரை தொடரப்போகிறது. எந்த ஏழையும் பசியுடன் தூங்க மாட்டார்கள்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, புலம் பெயர் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டதற்கு குஜராத் அரசைப் பாராட்டுகிறேன்.
உள்கட்டமைப்புக்கு, நாடு இன்று லட்சக்கணக்கான கோடியைச் செலவு செய்கிறது. அதே நேரத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எளிதாக வாழ்வதற்கான புதிய அளவுருக்களையும் அமைக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டுக்கு இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
2 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் வீடுகளைப் பெற்றுள்ளன. 10 கோடி குடும்பங்கள் கழிவறைகளைப் பெற்றுள்ளன. அந்த அளவுக்கு அவர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், ஜன்-தன் வங்கிக் கணக்கு முறையிலும் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிகாரமயமாக்கலுக்கு, சுகாதாரம், கல்வி, வசதிகள் மற்றும் மாண்பை உறுதி செய்ய தொடர்ச்சியான கடின உழைப்பு தேவை. ஆயுஷ்மான் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு, சாலைகள், இலவச சமையல் எரிவாயு மற்றும் மின் இணைப்பு, முத்ரா, திட்டம், ஸ்வாநிதி திட்டம் போன்றவை ஏழைகளின் கவுரவமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன மற்றும் மேம்பாட்டுக்கான வழியாக மாறியுள்ளன.
இதுபோன்ற பல பணிகள் குஜராத் உட்பட நாடு முழுவதும் உள்ளன. இதன் காரணமாக, நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் நம்பிக்கையும் இன்று அதிகரிக்கிறது. இந்த தன்னம்பிக்கைதான் ஒவ்வொரு சவாலையும் சமாளிக்கும் ஒவ்வொரு கனவையும் நனவாக்கும் சூத்திரம்.
நூற்றாண்டு பேரிடர் ஏற்பட்டபோதும், ஒலிம்பிக் போட்டிக்கு அதிக அளவிலான விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றனர். அவர்கள் தகுதி மட்டும் பெறவில்லை. சிறந்த முன்னணி விளையாட்டு வீரர்களுடன் விளையாடும் போது அவர்களுக்கு கடுமையான போராட்டத்தை அளிக்கின்றனர்.
இந்திய விளையாட்டு வீரர்களின் வைராக்கியம், ஆர்வம் மற்றும் உணர்வு இன்று மிக அதிகமாக உள்ளது. சரியான, திறமையான நபர்கள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது, இந்த நம்பிக்கை வருகிறது. நடைமுறை மாறும்போதும் வெளிப்படைத்தன்மை ஏற்படும்போதும் இந்த நம்பிக்கை வருகிறது. இந்தப் புதிய நம்பிக்கை, புதிய இந்தியாவின் அடையாளமாக மாறிவருகிறது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நமது தடுப்பூசி திட்டத்திலும் இந்த நம்பிக்கையை மக்கள் தொடர வேண்டும். உலகளாவிய பெருந்தொற்றுச் சூழலில், நமது கண்காணிப்பைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
50 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. 3.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத்தும் சென்று கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் கூட்டத்தில் இருப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
நாட்டை மேம்படுத்த, புதிய எழுச்சியை உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவில், இந்தத் தூய உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்தத் தீர்மானங்களில் ஏழைகள், பணக்காரர், ஆண்கள் மற்றும் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT