Published : 03 Aug 2021 01:47 PM
Last Updated : 03 Aug 2021 01:47 PM
கேரளாவில் கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு கேரளாவில் 7 மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் திடீரென கரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்த அவர்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும் கேட்டறிந்தனர்.
பின்னர் மத்திய குழுவினர் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகள் நடத்தினர். பின்னர் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மத்திய குழு வழங்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT