Published : 03 Aug 2021 12:45 PM
Last Updated : 03 Aug 2021 12:45 PM
நாடாளுமன்றத்தையும், மக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களின் அவதூறான பேச்சால் அவமானப்படுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வைத்திருந்த காகிதங்களையும் பிடுங்கி திரிணமூல் எம்.பி. சாந்தனு சென் கிழித்து எறிந்தார். எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே இதுவரை 12 மசோதாக்களையும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதற்கிடையே பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் காலை சிற்றுண்டி அளித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பாஜக எம்.பி.க்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், முரளிதரன், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து மிகுந்த வேதனை அடைந்து, கோபமடைந்துள்ளார்.
எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், “எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்களின் செயல்பாடுகள், நடத்தையைப் பார்த்து பிரதமர் மோடி கடும் கோபமடைந்துள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கையிலிருந்து காகிதங்களைப் பறித்து கிழித்த சம்பவம், நாடாளுமன்றத்தையும், மக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமானப்படுத்துவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி.(திரிணமூல் ஓ பிரையன்) மசோதாக்கள் நிறைவேற்றியது குறித்து அவதூறாகப் பேசியதற்கும் பிரதமர் கண்டனம் தெரிவித்தார். அனைத்து மசோதாக்களையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பிரதமர் மோடி பேசியது குறித்துக் கூறுகையில், “மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதிலிருந்து நாம் நழுவக் கூடாது. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இ-ருபி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் அவமானப்படுத்தப்படுகின்றன. அமைச்சர் கையிலிருந்து காகிதங்களைப் பறித்து கிழித்தெறிந்த எம்.பி., மசோதாக்களை நிறைவேற்றியதை அவதூறாகப் பேசிய எம்.பி. தங்களின் செயல்களுக்கு மனம் வருந்தவில்லை. ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ.1.16 லட்சம் கோடி எட்டியதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்” எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT