Published : 02 Aug 2021 05:58 PM
Last Updated : 02 Aug 2021 05:58 PM
கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய குழு அனுப்பி வைக்கப்படுகிறது.
கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சோதனையில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதிகளில் காய்ச்சல், முகத்தில் வலி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாக சுகாதாரத் துறையினர் செல்கின்றனர். அறிகுறி உள்ளவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய குழு அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் வைரஸ் ஆய்வு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் புனே அனுப்படுகின்றனர். அவர்கள் ஜிகா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்வதுடன் மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளையும் அளிக்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT