Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM
நிதிஷ்குமார், மாயாவதி, கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாஜக.வுக்கு எதிராக 3-வது அணி அமைக்க ஹரியாணாவின் முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா திட்டமிட்டுள்ளார்.
ஹரியாணாவில் அதிக முள்ள ஜாட் சமூகத்தின் அரசியல் கட்சியாக இருப்பதுஐஎன்எல்டி. இதன் தலைவர்ஓம் பிரகாஷ் சவுதாலா, முதல்வராக இருந்த போது ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்த பிறகு சமீபத்தில் விடுதலையானார். இவர் வரும் மக்களவைக்கானத் தேர்தலில், 3-வது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார். இவர் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன்.
இதற்காக, சமீபத்தில் டெல்லியில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகியை சந்தித்து சவுதாலா பேசினார். அதன் பின், கட்சி தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ்குமாரிடமும் தியாகி போனில் பேசியிருந்தார். இதில், நிதிஷ் ஹரியாணா சென்று சவுதாலாவிடம் ஆலோசனை நடத்தி 3-வது அணி அமைக்கும் பணியை தொடங்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த அணிக்காக நிதிஷ் தவிர, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவ், பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரையும் சவுதாலா அடுத்தடுத்து சந்திக்க உள்ளார். இவர்கள் அனைவரையும் 3-வது அணியில் இடம்பெற வைக்க அவர் முயற்சிக்கிறார்.
இந்த பட்டியலில் பகுஜன் சமாஜின் மாயாவதி, திரிண மூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரை சேர்க்கவும் சவுதாலா திட்டமிட்டுள்ளார். பிறகு அனைவரையும் சேர்த்து ஹரியாணாவில் ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’நாளிழிடம் ஐஎன்எல்டியின் கட்சி நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘நம் நாட்டில்முதன்முதலில் மூன்றாவது அணிக்கான அச்சாரம் ஹரி யாணாவில் அமைக்கப்பட்டது. இதற்கு காரணமான எங்கள் கட்சி நிறுவனர் தேவிலாலின் பிறந்த நாள் செப்டம்பர் 25-ல் வருகிறது. அன்றைய நாளில் மீண்டும் ஒரு புதிய 3-வது அணி உருவாகும். இதில், பாஜக.வை எதிர்ப்பதால் காங்கிரஸும் விரும்பினால் சேரலாம்’’ என்று தெரிவித்தன.
சவுதாலா சிறையில் இருந்த போது, அவரது பேரன் துஷ்யந்த் சவுதாலா, ஐஎன்எல்டி.யில் இருந்து வெளியேறினார். ஜனநாயக ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை தொடங்கி ஹரியாணா தேர்தலில் போட்டியிட்டார். இதில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க தேவைப்பட்ட சில எம்எல்ஏ.க்கள் ஆதரவை துஷ்யந்த் அளித்து துணை முதல்வராகி இருப்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT