Published : 01 Aug 2021 06:18 PM
Last Updated : 01 Aug 2021 06:18 PM
முத்தலாக்கிற்கு எதிரான இஸ்லாமிய பெண்களின் போராட்டத்தை வணங்கும் நாள் ஆகஸ்ட் 1-ம் தேதி என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் தினம் பல்வேறு அமைப்புகளால் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
டெல்லியில் இன்று நடைபெற்ற இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் தின நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி, சிறுபான்மையினர் நலன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பல இஸ்லாமிய பெண்களிடையே அமைச்சர்கள் உரையாடினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்களிடையே உரையாற்றிய ஸ்மிருதி இரானி கூறியதாவது:
முத்தலாக்கிற்கு எதிரான இஸ்லாமிய பெண்களின் போராட்டத்தை வணங்கும் நாள் ஆகஸ்ட் 1 ஆகும். இஸ்லாமிய பெண்களிடையே தொழில்முனைதலை ஊக்குவிப்பதற்காக, சிறுபான்மையினர் நலன் அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகம் ஆகியவை இணைந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பூபேந்தர் யாதவ், சமுதாயத்தின் அனைத்து பிரிவு பெண்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அரசமைப்பு இஸ்லாமிய பெண்களுக்குக் வழங்கியுள்ள உரிமைகளை உறுதி செய்வதற்கான மிகப்பெரிய சீர்திருத்தமாக முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் திகழ்வதாகவும், சிறப்பான விளைவுகளை அது ஏற்படுத்தியுள்ளதாகவும் நக்வி கூறினார். முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் வழக்குகள் நாடு முழுவதும் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் தினம் பல்வேறு அமைப்புகளால் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்ட நிலையில் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் முழுமனதுடன் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT