Published : 01 Aug 2021 03:09 PM
Last Updated : 01 Aug 2021 03:09 PM
இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அணுகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.
இந்த விவகாரத்தில் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என் ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான்பிரிட்டாஸ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வரும் 5-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என அணுகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.
இது குறித்து எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “ நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பெரிய கவலையை பெகாசஸ் விவகாரம் எழுப்பியுள்ளது. ஆதலால், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக நேர்மையான, சார்பற்ற விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தை விரைவில் அணுகக்கூடும்” எனத் தெரிவிக்கின்றன.
பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்படாவிடாமல் எதிர்க்கட்சிகள் முடக்குவதாகவும்,இதனால் மக்களின்வரிப்பணம் ரூ.133 கோடி வீணாகிவிட்டதாக பாஜக தீவிரமான குற்றச்சாட்டை கூறி வருகிறது.
இந்த சூழலில் அதற்குபதிலடியாக உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் நாடஉள்ளன.பெகாசஸ் விவகாரத்தை இனிமேல் நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் உச்ச நீதிமன்றம் தலையிடவைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்துவருகின்றன. வரும்வாரத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அணுகுமுறையில் மாற்றம்இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பாமல் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, வேலையின்மை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளாதது, தடுப்பூசி பற்றாக்குறை ஆகியவற்றை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT