Last Updated : 01 Aug, 2021 12:04 PM

 

Published : 01 Aug 2021 12:04 PM
Last Updated : 01 Aug 2021 12:04 PM

கரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு

உச்ச நீதிமன்றம் | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்ட கணவரை குணப்படுத்த ரூ.ஒரு கோடிவரை செலவு செய்த பெண், கணவரின் மருத்துவச் செலவுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவியிலிருந்து உதவி வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் ஷீலா மேரா தனது வழக்கறிஞர் கிருஷ்ண குமார் சிங் மூலம் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷீலா மேரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிஷ் குமார் கோஹியா என்பவரைத் திருமணம் செய்தார். இருவரும் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே 21-ம் தேதி மணிஷ் குமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மே 9-ம் தேதியிலிருந்து ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியது.

இதையடுத்து, மத்தியப்பிரதேசம் ஹோசங்காபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிஷ் குமார் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. கரோனாவிலிருந்து மணிஷ் குமார் மீண்டாலும் ஆக்சிஜன் அளவு மட்டும் சீராகவில்லை. அதிகமான அளவு ஸ்டீராய்ட் மருந்துகள் சிகிச்சையின்போது மணி்ஷ்குமாருக்கு அளிக்கப்பட்டதால், அவரின் நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் அளவு மேலும் மோசமானது. தற்போது எக்மோ கருவி சிகிச்சையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இந்த நுரையீரல் அறுவை சிகிச்சைக்காக ரூ.55 லட்சம் தேவைப்படுகிறது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட மணிஷ்குமாருக்கு இதுவரை ஷீலா ரூ.ஒரு கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளார். அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால், பிஎம் கேர்ஸ்நிதி, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பணம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஷீலா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

என் கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. என் கணவரின் உடல்நிலையைப் பாதுகாக்க ஏற்கெனவே ரூ.ஒரு கோடிக்கும் அதிகமாக செலவிட்டுவிட்டேன். அடுத்த கட்ட சிகிச்சைக்காக பணத்தை தயார் செய்துவருகிறேன்.

ஆனால் எனக்கு தேவையான நிதி கிடைக்காத பட்சத்தில் பிஎம் கேர்ஸ் நிதி,பிரதமர் நிவாரண நிதி, மத்திய பிரதேச முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை வழங்கிட உத்தரவிட வேண்டும். என் கணவர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார், சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டவும் தாமதமாகலாம் ஆதலால் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.

எனக்கு இதுவரை மத்தியப்பிரதேச அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சிகிச்சைக்கான நிதியுதவி வழங்க தாமதமானால், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையிலும் தொய்வு ஏற்படலாம், உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்பதால் நிதியுதவி கோருகிறேன். மருத்துவமனைக்கு பணம் செலுத்த தாமதமானாலும் தொடர்ந்து சிகிச்சையளி்க்க உத்தரவிட வேண்டும். அனைவருக்கும் சமமான நீதி மற்றும் நல்ல மனசாட்சி என்ற அடிப்படையில்தான் உதவி கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x