Published : 31 Jul 2021 07:07 PM
Last Updated : 31 Jul 2021 07:07 PM
நாட்டின் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது.
சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் மிக அதிகமாக தினந்தோறும் 20 ஆயிரம் என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கோவிட்-19 நிலவரம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.
கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கொவிட் மேலாண்மைக்காக சுகாதார அதிகாரிகளால் இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த மாநிலங்களில் அன்றாட கொவிட் பாதிப்பு அல்லது தொற்று உறுதி விகிதம் அதிகரித்து வருகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவாவும் கூட்டத்தில் பங்கேற்றார்.
முதன்மைச் செயலாளர் (சுகாதாரம்), தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர், மாநிலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
தேசிய அளவிலான செரோ பரவல் ஆய்வு, பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து அதே நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலங்களில் மாவட்ட அளவிலான நோய் பரவும் தரவுகளுக்காக தங்கள் மாநில அளவிலான செரோ ஆய்வை நடத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகும் தொகுப்புகளில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பாதிப்புகளின் விவரணையாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிந்ததன் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்ணயிக்க வேண்டும்.
தற்போதைய மருத்துவ உள்கட்டமைப்பை, குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக அவசரகால கொவிட்- 19 நடவடிக்கை தொகுப்பு-II-ஐ பயன்படுத்தி, அதனை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT