Published : 31 Jul 2021 11:27 AM
Last Updated : 31 Jul 2021 11:27 AM
போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம், 2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போக்சோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில் அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்டம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது.
மத்திய அரசின் திட்டம் மூலம், 389 பிரத்தியேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட, 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நீதித்துறை அமல்படுத்தியது. நீதித்துறை தெரிவித்த தகவல்படி, 640 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 338 போக்சோ நீதிமன்றங்கள் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளன. இவை 2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகளை முடித்துள்ளன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்சோ சட்ட வழக்குகள், குற்றப் பத்திரிக்கைகள், தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள், தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் விதிமுறைகள் படி, நிறுவனம் சாரா குழந்தை பராமரிப்புக்காக ஒரு குழந்தைக்கு மாதத்தோறும் ரூ.2000/- அளிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை இந்த நிதியளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT