Published : 30 Jul 2021 01:43 PM
Last Updated : 30 Jul 2021 01:43 PM
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்து, இந்து என்.ராம், வழக்கறிஞர் எம்.எல். சர்மா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிக பொருட்செலவில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருளை அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், பிரபலங்களின் தொலைபேசி தகவல்களைச் சேகரிப்பது, ஒட்டுக் கேட்பது எனப் பயன்படுத்தியது யார் என அறிவிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
குறிப்பாக இந்த விவகாரம் தேசப் பாதுகாப்பு, தனி மனித அந்தரங்கத் தகவல் ஆகியவை அடங்கியுள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனவும் மனுக்களில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு முறையீடு செய்தார்.
இதனையடுத்து, இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் அடுத்த வாரம் (ஆகஸ்ட் முதல் வாரம்) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT