Published : 30 Jul 2021 11:48 AM
Last Updated : 30 Jul 2021 11:48 AM

தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60% பணியிடங்களும் காலியாக உள்ளன: சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

சு.வெங்கடேசன்: கோப்புப்படம்

சென்னை

தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60 சதவீதப் பணியிடங்களும் காலியாக உள்ளன என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்விக்கு மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில், "தேசிய சிறுபான்மை ஆணையத்தில் மொத்த ஊழியர் பலம் என்ன? ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளனவா? காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? டெல்லி உயர் நீதிமன்றம் காலியிடங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்ப வேண்டுமென்ற ஆணையைப் பிறப்பித்துள்ளனவா? நீதிமன்ற ஆணையை அமலாக்க என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

இக்கேள்விக்கு மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த பதில்:

"1992இல் உருவாக்கப்பட்ட தேசிய சிறுபான்மை ஆணையம் அரசியல் சாசனம், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் சட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணித்து வருகிறது. இவற்றின் சிறப்பான அமலாக்கத்துக்கான பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தும் வருகிறது. புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து பாரபட்சங்களைக் களைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சிறுபான்மையினர் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண ஆய்வுகளை நடத்துகிறது. அரசுகளுக்கு ஆலோசனைகள் தருகிறது. காலமுறை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கிறது.

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் மொத்த ஊழியர் பலம் 80 பேர். தற்போது 49 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில், தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் பதவிகள் அடக்கம். கோவிட் காலத்தில் எழுந்த காலியிடங்கள் இவை. காலியிடங்களை நிரப்புவது என்பது பணி நியமன விதிகள் அடிப்படையில் செய்யப்படுகின்றன. இக்காலியிடங்கள் 31.07.2021-க்குள்ளாக நிரப்ப வேண்டுமென்று டெல்லி உயர் நீதிமன்ற ஆணை (ரிட் மனு -சி- 1985 /2021) பணித்திருக்கிறது. அந்த உத்தரவு அரசின் பரிசீலனையில் உள்ளது".

இவ்வாறு அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், "80 ஊழியர் இடங்களில் 49 இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சி தருகிறது. அதிலும், தலைவர் பதவியே காலியாக இருக்கிறது. 5 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இந்த நிலையில், எப்படி ஆணையம் செயல்பட முடியும்? சிறுபான்மையினர் நலன்களை எப்படி உறுதி செய்ய முடியும்? ஆகவே, டெல்லி உயர் நீதிமன்ற ஆணை உடனடியாக அமலாக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x