Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM
ஆன்லைன் வகுப்புக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்இடி பல்ப் தயாரிக்கும் பணியில் 3 சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தங்கள் குடும்பத்தின் வறுமையை விரட்டி உள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செருபுழா பகுதியைச் சேர்ந்த செஞ்சோ, ஸ்டீபன், சோனி ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்கள் முறையே 7, 8 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் தங்கள் படிப்புக்கு மத்தியில் வீட்டிலேயே எல்இடி பல்ப் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சகோதர்கள் மூவரும் இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது:
எங்கள் தந்தை 9 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அதன் பிறகு எங்கள் அம்மா தையல் வேலைசெய்து எங்களை வளர்க்கத் தொடங்கினார். இதற்கிடையில் கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் என் அம்மாவுக்கு தொழில்வாய்ப்பு நின்றுவிட்டது. அப்போது அக்கம்,பக்கத்து வீடுகளில் பல்ப் பழுதானால் சரிசெய்யும் வேலையைச் செய்தோம். அரசு உத்தரவின்படி கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் புதிதாக எல்இடி பல்ப் வாங்க முடியாதவர்கள், எங்களைத் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அந்த பல்பை கடைகள் திறக்கும் காலம்வரை எரியச் செய்தோம். இதேபோல் எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுதுநீக்கவும் செய்தோம். அவற்றின் மூலம் எங்களுக்கு ஓரளவு வருமானம் வந்தது. அந்த பணத்தில் தான் வீட்டு செலவு மற்றும் படிப்பு செலவை பார்த்து வந்தோம்.
இப்படித்தான் எங்கள் பயணம் தொடங்கியது. தொடர்ந்து, நாங்களே சொந்தமாக எல்இடி பல்ப்களை தயாரிக்க முடிவு செய்தோம். சந்தையில் இருந்து இதற்கான மூலப்பொருட்களை வாங்கினோம். ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடப்பதால் அதிக நேரம் கிடைத்தது. அதன்மூலம் இந்ததொழிலை கற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தின் நெருக்கடியான சூழலை வென்றுள்ளோம்.
இதுபோக காலையில் செய்தித் தாள்கள் போடுகிறோம். உள்ளூரில் விளம்பர துண்டுபிரசுரங்களை வினியோகிக்கிறோம். இதன் மூலமும் வருவாய் ஈட்டி வரு கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT