Last Updated : 23 Feb, 2016 09:15 AM

 

Published : 23 Feb 2016 09:15 AM
Last Updated : 23 Feb 2016 09:15 AM

‘ஏசி’ அறையில் அமர்ந்து கொண்டு நீதிமன்ற உதவியை நாடுவீர்களா? - டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

குடிநீர் பிரச்னையை தீர்க்காமல், ‘ஏசி’ அறையில் அமர்ந்து கொண்டு நீதிமன்ற உத்தரவை கோருவீர்களா? என்று டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜாட் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹரியாணா மாநிலத்தில் உள்ள முனாக் கால்வாயின் குடிநீர் விநியோகத்தை அவர்கள் முடக்கினர். இதனால், டெல்லி நகரம் முழுவதும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ‘டெல்லியின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ள ஹரியாணா மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். முனாக் கால்வாய்க்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், யு.யு.லலித் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, டெல்லி குடிநீர் விநியோகத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த நீதிபதிகள், ‘ஓர் அரசாங்கம் மற்றொரு அரசாங்கத்திடம் பேசித் தீர்க்க வேண்டிய பிரசிச்னையை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவீர்களா? போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பிரச்சினையை தீர்க்காமல், இங்கு ‘ஏசி’ அறையில் அமர்ந்து கொண்டு நீதிமன்றத்தை உத்தரவிடும்படி கோருவீர்களா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இருப்பினும், டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், டெல்லிக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும்படி ஹரியாணா அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து நிலவர அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், முனாக் கால்வாய்க்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

முன்னதாக ஹரியாணா மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜாட் இடஒதுக்கீட்டு போராட்டக்காரர்கள், முனாக் கால்வாயில் குடிநீர் விநியோகத்தை தடுத்து நிறுத்தும் வகையில் முடக்கி வைத்திருந்தனர். தற்போது அவர்கள் வெளியேற்றப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, திங்களன்றே (நேற்று) டெல்லிக்கு குடிநீர் விநியோகம் சீராகும்’ என்று உறுதியளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x