Published : 29 Jul 2021 05:27 PM
Last Updated : 29 Jul 2021 05:27 PM
திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார்.
மம்தா பானர்ஜி ஐந்து நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். டெல்லி பயணத்தின் தொடக்கமாக அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இது சம்பிரதாய சந்திப்பு என்று கூறினார்.
பின்னர் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார்.
சோனியா காந்தியுடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பெகாசஸ் விவகாரம், 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது ஆகியன குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்தநிலையில் திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் டெல்லி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் பாஜகவுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT