Published : 28 Jul 2021 06:25 PM
Last Updated : 28 Jul 2021 06:25 PM
பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி ஐந்து நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். டெல்லி பயணத்தின் தொடக்கமாக அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமரைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்தார். இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், "அவர் (சோனியா காந்தி) என்னை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கு ராகுல் காந்தியும் இருந்தார். இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. நேர்மறையான சந்திப்பாக இருந்தது. இதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும். பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.
நான் தலைவர் இல்லை. நான் ஒரு சாதாரணத் தொண்டர். நான் தெருவில் இருக்கும் ஒரு சாமான்யன். பாஜகவை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.
நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. மக்கள் பிரச்சினைகள் இங்கு பேசப்பட வேண்டும். டீக்கடைகளில் மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியாது. அதை நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும்" என்று கூறினார்.
சோனியா காந்தியுடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பெகாசஸ் விவகாரம், 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது ஆகியன குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் Vs மோடி என்றுதான் போட்டி நிகழும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT