Published : 28 Jul 2021 12:01 PM
Last Updated : 28 Jul 2021 12:01 PM

மார்கண்டேயா ஆற்றில் கர்நாடக அரசு அணை; தமிழக அரசு எதிர்ப்பு: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

வைகோ: கோப்புப்படம்

புதுடெல்லி

கர்நாடக அரசு மார்கண்டேயா ஆற்றில் அணை கட்டியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதா என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு வைகோ, எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"1. தமிழக விவசாயிகளின் வேளாண்மைக்குத் தண்ணீர் வருவதைத் தடுக்கின்ற வகையில், கர்நாடக அரசு மார்கண்டேயா ஆற்றில் அணை கட்டியது குறித்து, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றதா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

3. தமிழகம் எழுப்பி இருக்கின்ற கோரிக்கைகளை ஆய்வு செய்ய, ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படுமா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இல்லை என்றால், ஏன்? அதற்கான காரணங்களைத் தருக".

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்: கோப்புப்படம்

இக்கேள்விகளுக்கு அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கம்:

"1956ஆம் ஆண்டு, மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் , 2019 நவம்பர் 30 ஆம் நாள், தமிழக அரசு குற்றச்சாட்டுகள் அடங்கிய கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்பி இருக்கின்றது. அதே சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ், பெண்ணையாறு அல்லது தென்பெண்ணை என அழைக்கப்படுகின்ற ஆற்று நீர்ப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து வைப்பதற்கு, தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்றான மார்கண்டேயா ஆற்றில், 500 MCFT நீர் தேக்கி வைப்பதற்காக, தமிழகம் - கர்நாடக எல்லையில் யார்கோல் என்ற கிராமத்தில், கர்நாடக அரசின் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியம் ஒரு அணை கட்டுவதற்கு, அதே கோரிக்கை விண்ணப்பத்தில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மத்திய நீர்வள ஆணையத்தில் (Central Water Commission) தலைவர் தலைமையில், ஒரு பேச்சுவார்த்தைக் குழு, 20.1.2020 அன்று, ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 4இன் கீழ் அமைக்கப்பட்டது. இரண்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், மேற்கொண்டு பேசுவதில் பயன் இல்லை என்று அந்தக் குழு கூறியதால், அடுத்து கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர், 16.03.2021, 08.07.2021 ஆகிய நாள்களில், மேற்கொண்டு தகவல்கள் கேட்டு, தமிழகம் - கர்நாடக அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன".

இவ்வாறு கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x