Published : 27 Jul 2021 06:47 PM
Last Updated : 27 Jul 2021 06:47 PM
பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவது என முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடி முடிவு செய்துள்ளன.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தவறேதும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்களிடம் பா.ஜ.க எம்.பி.க்கள் அம்பலப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து முக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், தேசிய மாநாடு, ஆர்எஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே பெகாசஸ் மற்றும் விவசாயச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். 7 கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT