Published : 27 Jul 2021 04:14 PM
Last Updated : 27 Jul 2021 04:14 PM
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலின் விவரம் வருமாறு:
உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 6 பிறப்பித்த உத்தரவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய உளவு அமைப்புகள் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.
அதன்படி மத்திய உளவு அமைப்புகளும் மாநில அரசுகளிடம் நிதி கோரியது. அதேபோல் இவ்விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் நேரடியாகவே தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. காவல்துறை மாநிலப் பட்டியலில் இருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை காவல் நிலையங்கள் இருக்கும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கே தெரியுமென்பதால் இதுதொடர்பாக ஜூலை 8 ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் பணியை 2022க்கு நிறைவு செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, விசாரணைக்கு வருபவர்கள் மற்றும் கைதிகள் மீதான சித்ரவதைகளை தடுக்க, அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம்ஆண்டு தீர்ப்பளித்தது.
அனைத்து போலீஸ் நிலையங்களின் நுழைவாயிலிலும், லாக்அப்-களிலும், காரிடார்களிலும், லாபி, ரிசப்ஷன், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகளிலும், லாக்அப்புக்கு வெளியேயும், போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் வெளிப்புறத்திலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த தேவையான, போதுமான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT