Published : 27 Jul 2021 12:22 PM
Last Updated : 27 Jul 2021 12:22 PM
இஸ்ரேலியின் என்எஸ்ஓ அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருளை இந்தியாவில் யார் பயன்படுத்தியது என்ற விவரம் தெரியவரும் வரை அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.
இதற்கிடையே கடந்த 22-ம் தேதி இஸ்ரேலியப் பிரதமர் நாப்தலி பெனட்டை தொடர்பு கொண்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் பேசியுள்ளார்.
அப்போது, தன்னுடைய செல்போனை மொராக்கோ பாதுகாப்புப்படைகள் ஒட்டுக்கேட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன், அவர்கள் பெகாசஸ் செயலியைப் பயன்படுத்தினார்களா என்று கேட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை இஸ்ரேல் அரசு தீவிரமாக எடுத்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், “ இந்தியாவில் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியது யார், என்எஸ்ஓ அமைப்பின் இந்திய வாடிக்கையாளர் யார். இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஏதும் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா, அல்லது தனியார் அமைப்புகள் ஏதேனும் பெகாசஸை பயன்படுத்தினார்களா
இந்தியாவில் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியது யார், என்ஓஸ்அமைப்பின் இந்திய வாடிக்கையாளர் யார் என்பது விரைவில் வெளியாகும். அதுவரை, ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT