Published : 27 Jul 2021 10:25 AM
Last Updated : 27 Jul 2021 10:25 AM
வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் அசாம் போலீஸார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மிசோரம் மாநில எல்லையிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 காவலர்கள் கொல்லப்பட்டனர். மாநில எல்லையைக் காக்கும் போராட்டத்தில் 6 காவலர்கள் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மிசோரம் உள்துறை அமைச்சர் லால்சம்லியானா வெளியிட்ட அறிக்கையில், “அசாம் போலீஸார் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் எல்லைப் பகுதியிலிருந்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். எல்லைப் பகுதியில் சிஆர்பிஎஃப் போலீஸார் ஆயுதங்களின்றி பணியாற்றி வந்தனர். அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் பதிலடி கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இரு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அறிவுறுத்தினார். பதற்றம் நிலவும் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு மாநில முதல்வர்களையும் அமித் ஷா கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில், சுமுகமாக தீர்த்துக்கொள்ள இரு மாநில முதல்வர்களும் அமித் ஷாவிடம் உறுதியளித்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் தலையிட்டதையடுத்து, அசாம் போலீஸார் தாங்கள் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து விலகி, அங்கு சிஆர்பிஎஃப் போலீஸாரை நியமித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், “மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.
இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT