Last Updated : 27 Jul, 2021 08:48 AM

1  

Published : 27 Jul 2021 08:48 AM
Last Updated : 27 Jul 2021 08:48 AM

மிசோரத்துடன் எல்லை மோதல்: கலவரத்தில் அசாம் போலீஸார் 6 பேர் சுட்டுக் கொலை;50பேர் காயம்: அமித் ஷா தலையிட்டு சமாதானம்

அசாம், மிசோரம் எல்லையில் நடந்த மோதல்: படம் உதவி ட்விட்டர்

குவஹாட்டி

அசாம், மிசோரம் இடையே ஏற்பட்ட எல்லைத் தகராறில் இரு மாநிலத்தவருக்கும் நடந்த மோதலில் அசாம் போலீஸார் 6 பேர் உயிரிழந்தனர், காவல் கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். போலீஸாரால் ஏற்பட்ட வன்முறைக்கு இரு முதல்வர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மிசாரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோருடன் பேசி சமாதானம் செய்தார்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து வருகின்றன. இதில் அசாம் மாநிலத்தில் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கச்சார், கரிம்கஞ்ச், ஹாய்லாகன்டி ஆகிய மாவட்டங்களும், மிசோரம் மாநிலத்தின் அய்சவால், கொலாசிப், மமித் ஆகியவை எல்லைப் பகுதிகளைப் பிரிக்கின்றன.

எல்லைத் தொடர்பா சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது.

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா

அசாம் மாவட்டமான சச்சாரின் லைலாபூரில் மிசோரம் அரசு அதிகாரிகள் கடந்த ஆண்டுஅக்டோபர் 16-ம் தேதி ஒரு கரோனா பரிசோதனை மையத்தை அமைத்தனர். இதற்கு அசாம் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போது அப்பகுதியில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அங்கு ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர், துப்பாக்கிச்சூடும், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.

அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மிசோரம் மாநில எல்லையிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 காவலர்கள் கொல்லப்பட்டனர். மாநில எல்லையைக் காக்கும் போராட்டத்தில் 6 காவலர்கள் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மிசாரோம் உள்துறை அமைச்சர் லால்சம்லியானா வெளியிட்ட அறிக்கையில் “ அசாம் போலீஸார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் எல்லைப்பகுதியிலிருந்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். எல்லைப்பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் ஆயுதங்களின்றி பணியாற்றி வந்தனர். அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் பதிலடி கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா

அசாம் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்கிறது. சாச்சர் காவல்கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டிலும், கல்வீச்சிலும் காயமடைந்துள்ளன். இரு மாநில எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

எத்தனை பேர் காயமடைந்தார்கள் என உடனடியாகக் கூற முடியாது, எனக்குத் தெரிந்து 50 பேர்வரை காயமடைந்திருக்கலாம். எங்களின் காவல் கண்காணிப்பாள் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதனடையே நேற்று மாலை இரு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசியில் பேசி எல்லைப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அறிவுறுத்தினார். பதற்றம் நிலவும் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு மாநில முதல்வர்களையும் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில், சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு மாநில முதல்வர்களும் அமித் ஷாவிடம் உறுதியளி்த்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் தலையிட்டதையடுத்து, அசாம் போலீஸார் தாங்கள் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து விலகி, அங்கு சிஆர்பிஎப் போலீஸாரை நியமித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x