Published : 26 Jul 2021 11:28 AM
Last Updated : 26 Jul 2021 11:28 AM
உத்தரப்பிரதேத்தின் 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பிஹாரின் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதனால், அம்மாநில எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி உள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட பிஹாரின் அரசியல் கட்சிகளும் போட்டியிடத் தயாராகி வருகின்றன.
இம்மாநிலத்தில் பூர்வாஞ்சல் என்றழைக்கப்படும் கிழக்குப் பகுதி பிஹாரின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பிஹாரின் சமூகங்களும் அம்மாநில மொழியான போஜ்புரி பேசுபவர்களும் அதிகமாக வாழ்கின்றனர்.
இதனால், அம்மக்கள் இடையே பிஹாரின் கட்சிகளுக்கு சிறிது செல்வாக்கு உண்டு. இச்சூழலை பயன்படுத்தி பிஹாரின் கட்சிகள் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றன.
பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), அதன் கூட்டணிகளான விகாஸ் இன்ஸான் பார்ட்டி (விஐபி), இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (ஹெச்ஏஎம்) மற்றும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஆகிய கட்சிகள் உள்ளன.
இவை அனைத்தும் உ.பி. தேர்தலில் போட்டியிட்டால் பாஜகவிற்கு சாதகமாக்கி, எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஜேடியுவின் தலைவரான நிதிஷ்குமார் மட்டும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன.
இதில், அக்கட்சிக்கு உகந்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஜேடியு தனித்து போட்டியிடும். இக்கட்சியின் முக்கிய வாக்காளர்களான குர்மி சமூகத்தினர் கிழக்கு பகுதியின் உ.பி.யில் கணிசமாக உள்ளனர்.
மற்றொரு கட்சியான விஐபியின் தலைவர் முகேஷ் சஹானி, பிஹாரின் அமைச்சராகவும் உள்ளார். தனித்து போட்டியிடுவதாகக் கூறும் இவர், அதற்கானப் பூர்வாங்க பணிகளில் இறங்கியுள்ளார்.
இதன் துவக்கமாக உபியின் பல இடங்களில் பூலன்தேவியின் சிலையை நிறுவத் திட்டமிடுகிறார். சம்பல் பள்ளத்தாக்கின் முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதியின் எம்.பி.யுமான பூலன்தேவி, மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இவரது நினைவு நாளான இன்று ஜுலை 26 இல் உ.பி.யில் பூலன் தேவிக்கு சிலைகளை வைக்க முயல்கிறார். இந்த சிலைகளுக்கான முயற்சி, ஏற்கனவே சில மீனவ சமுதாயக் கட்சிகளால் எடுக்கப்பட்டு உ.பி. அரசு அதற்கான அனுமதி தரவில்லை.
இந்நிலையில், அவரது சிலையை அமைத்து விஐபி கட்சி அமைப்பதன் மூலம் மீனவர் ஆதரவைப் பெற முயல்கின்றது. இதற்காக, வாரணாசிக்கு அருகிலுள்ள ஜோன்பூரின் ஷாகன்ச் மற்றும் மிர்சாபூரின் கியான்பூர் மற்றும் ஆசம்கரின் பன்ஸ்தி ஆகிய இடங்களில் பூலன்தேவியின் சிலைகாகத் தேர்வாகி உள்ளன.
இப்பகுதிகளில் மீனவர் சமுதாயத்தினர் அதிகம் உண்டு. பிஹாரின் விஐபி கட்சியானது பிற்படுத்தப்பட்டு மற்றும் மீனவர் சமுதாயத்திற்கானக் கட்சியாக உள்ளது.
பிஹாரில் ஆளும் கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான ஹெச்ஏஎம் கட்சியும் உ.பி. தேர்தல் மூலம் கால்பதிக்க முயல்கிறது. இக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ஆதரவை உ.பி.யிலும் தேட முயல்கிறார்.
இதே சமூகத்தின் பிஹார் கட்சியான எல்ஜேபியும் உ.பி. தேர்தலில் களம் இறங்குகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக இக்கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானால் துவக்கப்பட்டது.
அவருக்கு பின் எல்ஜேபியின் தலைவரான சிராக் பாஸ்வான் எம்.பி.யிடமிருந்து பதவியை சித்தப்பா பசுபதி பாரஸ் பாஸ்வான் பறித்துள்ளார். மத்திய அரசின் புதிய
அமைச்சரவையிலும் இடம் பெற்றவருக்கு பாஜகவின் ஆதரவு தொடர்கிறது. இதன் நன்றிக்கடனான பசுபதி பாஸ்வான், உ.பி.யில் தனித்து போட்டியிட்டு எதிர்கட்சிகளின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்குகளை பிரிப்பார் எனக் கருதப்படுகிறது. இதன்மூலம், உ.பி.யில் பாஜக பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT