Last Updated : 25 Jul, 2021 04:41 PM

3  

Published : 25 Jul 2021 04:41 PM
Last Updated : 25 Jul 2021 04:41 PM

பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்: கூட்டுக்குழு விசாரணை தேவை: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் | கோப்புப்படம்

புதுடெல்லி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளும் சட்டவிரோத உளவு மூலம்தான் நடந்துள்ளதா என எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்த பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி உதவி இருக்கலாம்.

இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையைவிட கூட்டுக்குழு விசாரணை சக்திவாய்ந்தது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விதிகள் மிகவும் கண்டிப்பானவை. ஆதாரங்களை வெளிப்படையாக எடுக்க முடியாது. ஆனால், அதிகாரம் மிக்க கூட்டுக்குழு, பொதுவெளிக்கு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும், சாட்சிகளை விசாரிக்க முடியும், சம்மனும் அனுப்பலாம். ஆதலால் கூட்டுக்குழு விசாரணைதான் நிலைக்குழு விசாரணையைவிட அதிகாரமிக்கது.

நாடாளுமன்றத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மிகவும் சாதுர்யமாகப் பேசினார், மிகவும் புத்திசாலித்தனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசியுள்ளார். அதிகாரபூர்வற்ற உளவுபார்த்தலை அஸ்வினி மறுக்கிறார். அதேநேரம், உளவுபார்த்தலை அவர் மறுக்கவில்லை. அதிகாரபூர்வமான கண்காணிப்பு குறித்து அவர் மறுக்கவும் இல்லை.

நிச்சயமாக அதிகாரபூர்வற்ற என்ற வார்த்தைக்கும், அதிகாரபூர்வமானது என்ற வார்த்தைக்கும் வேறுபாடு அமைச்சருக்குத் தெரிந்திருக்கும்.

அனைவரும் கண்காணிக்கப்பட்டார்களா, பெகாசஸ் மூலம் உளவுபார்க்கப்பட்டார்களா. பெகாசஸ் பயன்படுத்தப்பட்டால், யார் அதைவாங்கியது. அரசுமூலம் வாங்கப்பட்டதா அல்லது ஏஜென்சிகள் வாங்கினவா. இதற்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்.

ஒரு சாதாரண குடிமகனின் மனதில் இந்தக் கேள்விகள்தான் இருக்கின்றன. இதற்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.

பிரான்ஸ் அரசு பெகாசஸ் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, இஸ்ரேல் அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. ஆனால், இந்திய அரசு ஏன் விசாரணைக்கு உத்தரவிடவி்ல்லை, இந்த விவகாரத்தில் எழும் கேள்விகளுக்கு பதிலை ஏன் தேடவில்லை.

பெகாசஸ் உளவு என்பது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. ஏனென்றால், நாங்கள் யாரையும் கண்காணிக்கவில்லை என்று அரசு கூறிவிட்டால், அப்போது யார் கண்காணித்தது என்றகேள்வி எழும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது வார்த்தைகளை திறமையாகக் கையாண்டுள்ளார்.

பெகாசஸ் மூலம் சில செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதை அவர் மறுக்கவில்லை. எந்த உளவு மென்பொருள் மூலமும் செல்போன்கள் கண்காணிக்கப்படவில்லை என்றால், இந்த விவகாரத்துக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும்.

ஆதலால், பெகாசஸ் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது, யாரேனும் கண்காணிக்கப்பட்டார்களா என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

சில பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிப்பு செய்தன என்று கூறினாலும் அந்த ஏஜென்சிக்கான அமைச்சர் பிரதமர் மோடிதான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் தன்னுடைய துறையில் நடப்பது பற்றித் தெரியும். பிரதமர் மோடிக்கு அனைத்து துறைகளிலும் நடப்பது தெரியும். ஆதலால், பிரதமர் மோடி, தாமாக முன்வந்து, பெகாசஸ் விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x