Published : 24 Jul 2021 02:19 PM
Last Updated : 24 Jul 2021 02:19 PM
காலநிலை மாறுபாடுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என, மக்களைவையில், டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான, டி.ஆர்.பாலு நேற்று (ஜூலை 23) மக்களவையில், "அதிகரித்து வரும் காலநிலை மாறுபாடுகளாலும், தொழில்மயமாக்கலின் விளைவாகவும், மலேரியா போன்ற பல்வேறு நோய்கள் அதிகரிப்பதை தடுக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவது, உற்பத்தித் திறன் குறைவது, இதய நோய்கள் அதிகரிப்பது போன்றவற்றை தடுக்க, எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னென்ன?" என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, அளித்த பதில்:
"தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் உலகளாவிய முறையில், காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருவதால், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தின்படி, 25 சதவீத அளவுக்கு கரியமில வாயு உமிழ்வை குறைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ம் ஆண்டுக்குள்ளாக 35 சதவீதம் அளவுக்கு குறைத்துக் கொள்ளவும், 40 சதவீத அளவுக்கு மின் சக்தியை எரிசக்தித் தேவைகளுக்கு பயன்படுத்தவும், காடுகளின் நிலப்பரப்பை அதிகரிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழல், மனித சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றை பாதிக்கும் அளவுக்கு, புவியின் வெப்பம் 1.5 டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை காலங்களில் உற்பத்தித் திறன் பாதிக்கிறது.
மாலே நாட்டு ஒப்பந்தப்படி, காலநிலை மாற்றத்துக்கு தக்கவாறு, சுகாதாரத் துறையில் கொள்கை மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களால் ஏற்படும் சுகாதார குறைபாடுகளை தடுக்கவும், இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தேசிய அளவிலான காலநிலை மாற்ற திட்டங்கள் 2018-ம் ஆண்டு முதலாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன".
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT