Published : 23 Jul 2021 08:14 PM
Last Updated : 23 Jul 2021 08:14 PM
மகாராஷ்டிரா ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘மகாராஷ்டிரா ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கனமழை காரணமாக மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "மகாராஷ்டிராவின் ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT