Published : 23 Jul 2021 04:21 PM
Last Updated : 23 Jul 2021 04:21 PM
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், ராய்காட் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்குப் பருவமழை வலுத்துள்ளதையடுத்து, மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணப்புப் படையினர், போலீஸார், விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதில் ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்துக்குப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புப் படையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ரத்னகிரி மாவட்டத்திலும் பெய்த தொடர் மழையால், வஷிஸ்டி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தனியாக அமைக்கப்பட்ட மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததையடுத்து, நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு மருத்துமனைக்கு மாற்றப்பட்டனர்.
அடுத்த 3 நாட்களுக்கும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெள்ளச் சேதங்கள், உயிரிழப்புகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறுகையில், “ராய்காட் மாவட்டம் தலி கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது. கொங்கன் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்லவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT