Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM
உத்தரபிரதேசத்தில் சம்பல் கொள்ளையர்களுடன் ஆக்ரா போலீஸார் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் கும்பலின் தலைவன் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இது, மறைந்த முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யுமான பூலன்தேவியால் ஒரு காலத்தில் பிரபலம் அடைந்திருந்தது. சம்பலில் தற்போது ஓரிரு கொள்ளையர்களே மிஞ்சியுள்ளனர். இவர்களும் சம்பலுக்கு அருகிலுள்ள நகரங்களின் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆக்ராவின் பிரபல மருத்துவரான உமாகாந்த் குப்தா ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இவரை எந்த பணயத் தொகையும் இன்றி, ஆக்ரா மாவட்ட எஸ்.எஸ்.பி.யான தமிழர் ஜி.முனிராஜ் தலைமையிலானப் படை 24 மணி நேரத்தில் மீட்டது. இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒரு இளம்பெண் உட்பட 6 பேரும்கைது செய்யப்பட்டனர். இவர்களில்தப்பிய சம்பல் கும்பலின் தலைவன் பதம் சிங் தோமர் தலைமறைவானார். இவரது தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு, பதம்சிங் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆக்ராவின் எல்லையிலுள்ள கச்சாபுரா பகுதியில் ஓர் இருசக்கர வாகனம் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதை துரத்திச் சென்ற ஜக்னேர் காவல் நிலைய போலீஸார், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஓரிடத்தின் இருண்ட பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கொள்ளையர்களில் பதம்சிங் தோமரும் இருப்பதாகத் தெரிந்துள்ளது. இதைஅறிந்த தமிழரான எஸ்எஸ்பி முனிராஜ் நேரில் சென்றார் அங்கு இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பதம் சிங் தோமர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆக்ராவின் எஸ்எஸ்பி.யான தமிழர் முனிராஜ் கூறும்போது, ‘‘ராஜஸ்தானின் தோல்பூரை சேர்ந்த பதம்சிங், 4 வருடங்களாக பல ஆள் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். எங்கள் மீது அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். எனினும், குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் நாங்கள் தப்பிவிட்டோம். நாங்கள் திருப்பி சுட்டதில் தோமர், அவருடன் இருந்த சுங்க்கி பாண்டே ஆகியோர் குண்டடிப்பட்டு விழுந்தனர். இவர்களில் பாண்டே 15 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்’’ என்றார்.
உ.பி.யின் சிங்கம்
உ.பி.யின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் பணியாற்றிய முனிராஜ், தர்மபுரியின் அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர்,2009-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார்.இவரது அதிரடி நடவடிக்கைகளால் இவரை ‘உ.பி.யின் சிங்கம்’ என்று அம்மாநில மக்கள் அழைக்கின்றனர். கடந்த பிப்ரவரியில் ஆக்ராவின் எஸ்எஸ்பியாக பொறுப்பேற்றார். அப்போது முதல் நடைபெற்ற குற்றச்செயல்களின் 3 சம்பவங்களில் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT