Published : 22 Jul 2021 04:25 PM
Last Updated : 22 Jul 2021 04:25 PM
இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் எனத் தனித்தனியாக நீதி பரிபாலனமுறை இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தி்ல் காங்கிரஸ் நிர்வாகியைக் கொலை செய்த வழக்கில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவின் கணவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மத்தியப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் எம்எல்ஏவாக இருப்பவர் ராம்பாய் சிங். இவரின் கணவர் கோவிந்த் சிங். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் நிர்வாகி தேவேந்திர சவுரேஸ்யா கொல்லப்பட்ட வழக்கில் கோவிந்த் சிங் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் கோவிந்த் சிங்கிற்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தேவேந்திர சவுரேஸ்யாவின் மகன் சோமேஷ் சவுரேஸ்யா, மாநில அரசு ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கோவிந்த் சிங்கிற்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் கோவிந்த் சிங்கை வேறு சிறைக்கு மாற்றக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியுடன் கருத்துகளைத் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
''இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பது சுதந்திரமான, பாரபட்சமில்லாத நீதித்துறைதான். அரசியல் அழுத்தங்கள், தாக்கங்களில் இருந்து நீதித்துறை தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இருவிதமான நீதி பரிபாலனமுறை இருக்க முடியாது. பணக்காரர்களுக்கான, வளமையானவர்களுக்கான, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கான நீதி பரிபாலன முறையும், ஏழ்மையான, எந்தவிதமான பண வசதியும் இல்லாத, நீதியைப் பெறமுடியாத நிலையில் இருப்போருக்குத் தனியாக நீதி பரிபாலன முறையும் இருக்க முடியாது.
இருவிதமான நீதிமுறை இருப்பது சட்டத்தின் ஆட்சியை மெல்லக் குறைக்கும். சட்டத்தின் ஆட்சியை மாநில அரசு நிர்வாகம் நிலைநாட்டும் பொறுப்பையும் குறைத்துவிடும்.
மாவட்ட நீதி நிர்வாகம்தான் குடிமக்களின் முதல் அடையாளம். காலனி ஆதிக்க மனப்பான்மையை மாவட்ட நீதித்துறை அகற்றி, மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் மாற வேண்டும். ஆனால், நியாயத்துக்காக நீதிபதிகள் குரல் கொடுத்து எழுந்து நிற்கும்போது, அவர்கள் இலக்காக்கப்படுகிறார்கள். நீதித்துறையில் மக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மாவட்ட நீதித்துறை அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.
நீதித்துறையின் செயல்பாடு என்பது, அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு வேர்போன்ற அமைப்பாக இருக்க வேண்டும். நீதிபதிகள் எந்தவிதமான தடையுமின்றி, இடையூறுமின்றித் தீர்ப்பளிக்க வேண்டும், நீதித்துறைக்கும் நீதிபதிக்கும் சுதந்திரம், முக்கியமானது, கண்டிப்பாக இருக்கவேண்டியது.
உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மாவட்ட நீதித்துறை இயங்கினால், அதன் சுதந்திரத்தை வெளிப்புறத் தாக்கம், கட்டுப்பாட்டிலிருந்து காக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 50-ல் மாவட்ட நீதித்துறையின் சுதந்திரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் நிர்வாகம் நீதிபதிகளின் தனிப்பட்ட முடிவுகளாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும் மீறக் கூடாது.
நீதித்துறையின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தவறிவிட்டது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும்போதும் ரத்து செய்யும்போதும், ஆதாரங்களை ஆய்வு செய்யத் தவறிவிட்டது''.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT