Last Updated : 21 Jul, 2021 05:27 PM

2  

Published : 21 Jul 2021 05:27 PM
Last Updated : 21 Jul 2021 05:27 PM

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்: எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சையில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் தியாகிகள் தினத்தை ஒட்டி மம்தா பானர்ஜி இன்று காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். மேற்குவங்கத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றப் பின்னர் அவர் ஆற்றிய முதல் உரை இது.

அதில் அவர் கூறியதாவது:

வரும் 27 மற்றும் 28 ஆம் தேதியன்று நான் டெல்லி செல்கிறேன். அந்த இரு தினங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரேனும் என்னை சந்திக்க விரும்பினால் நான் அந்த சந்திப்புக்குத் தயாராக இருக்கிறேன்.

ஜனநாயகத்தின் தூணாக மூன்ற விஷயங்கள் திகழ்கின்றன. ஊடகம், நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையமே அந்த மூன்று தூண்கள். ஆனால், பெகாசஸ் உளவு மென்பொருளால் இந்த மூன்றுமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மெபொருள் ஆபத்தானது, ஆக்ரோஷமானது. என்னால் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச முடியவில்லை. ஏனென்றால் எனது போனும் ஒட்டுக்கேட்கப்படுகிறது.

சரத பவார் அவர்களே, டெல்லி முதல்வர் அவர்களே, கோவா முதல்வர் அவர்களே நான் உங்களுடன் எல்லாம் போனில் பேச முடியாது. என் போனில் நான் ப்ளாஸ்டர் போட்டுவைத்துள்ளேன். இந்த அரசாங்கம் மீது அப்படியொரு ப்ளாஸ்டர் போட வேண்டும்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். இந்த நாட்டை, ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றமே காப்பாற்ற வேண்டும். ஒரு குழு அமைத்து இவ்விவகாரத்தில் ஆழ்ந்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இந்த நாட்டை நீதித்துறை மட்டுமே காப்பாற்ற முடியும்.

இதை தனிப்பட்ட தாக்குதலாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை மோடி ஜி. ஆனால், நீங்களும், உள்துறை அமைச்சரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்க்க நாட்டின் அமைப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள். மக்களின் வரிப்பணத்தை நீங்கள் உளவு மென்பொருள் வாங்க செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பெட்ரோல் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. எரிபொருள் மூலமாக மட்டும் நீங்கள் ரூ.3.7 லட்சம் கோடி வசூலித்துள்ளீர்கள். அந்தப் பணமெல்லாம் எங்கே செல்கிறது.

நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை. ஆனால், நாட்டையே உங்கள் கண்காணிப்புக்குள் வைத்திருக்க முயன்று கொண்டிருக்கிறீர்கள். அமைச்சர்கள், நீதிபதிகள் போன் ஒட்டுகேட்கப் படுகிறது. அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் தொலைபேசியும் ஒட்டுகேட்கப்படுகிறது.

மக்கள் சுதந்திரம், வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியனவற்றை எதிர்பார்க்கின்றனர். ஆனால் மத்திய அரசின் ஆர்வமோ வன்முறை, மோதல்கள், பிரிவினைவாத அரசியல் செய்வதிலேயே உள்ளது.

வங்கத்துக்கு மக்களுக்கு அமைதியும் வளர்ச்சியுமே தேவைப்பட்டது. அதனாலேயே அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை மோடி ஜி. இந்த நாடே, ஏன் இந்த உலகமே மேற்குவங்க தேர்தலை உற்று நோக்கியது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x