Published : 21 Jul 2021 04:09 PM
Last Updated : 21 Jul 2021 04:09 PM
இந்து, முஸ்லிம் பிளவுக்கும் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்துக்கு இரு நாட்கள் பயணமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்றுள்ளார். கவுகாத்தியில் இன்று குடியுரிமை மற்றும் என்ஆர்சி, சிஏஏ குறித்த விவாதம், அரசியல் வரலாறு என்ற தலைப்பில் நடந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மோகன் பாகவத் பங்கேற்றுப் பேசியதாவது:
''மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றுக்கும் இந்துக்கள் முஸ்லிம்கள் பிளவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த இரு விவகாரங்களை வைத்து, சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அதைச் சுற்றி வகுப்புவாதங்களை உருவாக்குகிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது.
சுதந்திரத்துக்குப் பின், நாட்டின் முதல் பிரதமராக வந்தவர், சிறுபான்மையினரின் நலன் காக்கப்படும் என்று உறுதியளித்தார். அதுபோல் இன்றுவரை நடந்து வருகிறது. நாங்களும் அதை மதித்து தொடர்ந்து சிறுபான்மையினர் நலனைக் காப்போம். சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்கள் அங்கிருந்து துரத்தப்படும்போது, அவர்களுக்கு இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாதுகாப்பு வழங்கும். அச்சுறுத்தல், பயம் காரணமாக அண்டை நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வர விரும்புவோருக்கு நிச்சயமாக நாங்கள் உதவி செய்வோம்.
யார் இந்த தேசத்தின் குடிமக்கள் என அறிந்து கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. என்ஆர்சி விவகாரம் என்பது அரசியல்ரீதியானது, அரசுக்கும் தொடர்புள்ளது. ஆனால், அரசியலில் ஒரு சிலர் இந்த என்ஆர்சி மூலம் அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காக வகுப்புவாதங்களை உருவாக்குகிறார்கள்''.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT