Last Updated : 21 Jul, 2021 11:58 AM

35  

Published : 21 Jul 2021 11:58 AM
Last Updated : 21 Jul 2021 11:58 AM

பிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேதனை

பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் | படம் உதவி: ட்விட்டர்

சென்னை

மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பிரதமர் மோடியால், நாடாளுமன்றத்தில் நான் அறிமுகம் செய்து வைக்கப்படும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத்தொடரில் புதிய அமைச்சர்களைப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்க விடாமல் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக மாநிலங்களவையில் புதிய அமைச்சர்கள் குறித்து யாரையும் பிரதமர் மோடியால் அறிமுகம் செய்துவைக்க முடியாத அளவுக்குக் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனப் பல்வேறு விவகாரங்களை எழுப்பி, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களை பிரதமர் மோடியால் அவையில் அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நான் உணர்வுபூர்வமாக வேதனை அடைந்தேன். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சக வரலாற்றிலேயே முதன்முறையாக அருந்ததியினர் சமூகத்திலிருந்து ஒருவர் மத்திய அமைச்சராக வந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் நான் அறிமுகம் செய்து வைக்கப்படும் வாய்ப்பை இழந்துவிட்டது எனக்கு வேதனையாக இருக்கிறது

நாட்டில் உள்ள பட்டியலினப் பிரிவினர், பழங்குடியினர், ஓபிசி, பெண்கள் ஆகியோருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று அவையில் அறிமுகம் செய்யப்படுவது அவர்களுக்கு முக்கியமான நாள். அன்றைய தினத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் இடையூறு செய்தது வேதனைக்குரியது” என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x