Last Updated : 21 Jul, 2021 09:24 AM

 

Published : 21 Jul 2021 09:24 AM
Last Updated : 21 Jul 2021 09:24 AM

921 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கல்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி


2021, ஜூலை 15-ம் தேதி வரை கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட 921 பேருக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டிலிருந்து கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அந்தத் திட்டத்தில் கீழ் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து பாதிக்கப்படும் தனியார் மற்றும அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டம் 2021, ஏப்ரல் 24ம் தேதி முதல் கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு சுகதாாரப் பணியாளர்களில் உயிரிழந்தவர்களில் எத்தனைபேர் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அவர்கள் வகித்த பதவி வாரியான கணக்கு அரசிடம் இல்லை.

2021, ஜூலை 15ம்தேதிவரை, கரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட் 921 பேருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா 2-வது அலையின் போது, சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்களா என்பது குறித்து சர்வே ஏதும் எடுக்கப்படவி்ல்லை. ஆனால், நாட்டில் தற்போது 10.14 லட்சம் அலோபதி மருத்துவர்களும், 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களும் உள்ளனர். 854 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் நாட்டில் இருக்கிறது. 22.72 லட்சம் பதிவு செய்யப்பட்டசெவிலியர்கள் உள்ளனர், இதில் 16 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

இவ்வாறு பவார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x